கொங்கோவின் கிளர்ச்சி தலைவருக்கு யுத்த குற்றங்களிற்காக 30 வருட சிறைத்தண்டனை – மீண்டும் உறுதி செய்தது சர்வதேச நீதிமன்றம்

Wednesday, March 31st, 2021

கொங்கோவின் கிளர்ச்சி தலைவர் பொஸ்கோ டிகான்டாவிற்கு யுத்த குற்றங்களிற்காக வழங்கப்பட்ட தண்டனையை சர்வதேச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

யுத்த குற்றங்களிற்காக 2019 இல் வழங்கப்பட்ட 30 வருட சிறைத்தண்டனைக்கு எதிராக கொங்கோவின் கிளர்ச்சி தலைவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டினை ஆராய்ந்த சர்வதேச நீதிமன்றம் அவரிற்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்துள்ளது.

கொலை பாலியல் வன்முறை சிறுவர்களை படையணிகளில் சேர்த்தல் உட்பட 18 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றம் அவருக்கு 30 வருட சிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.

பாலியல் அடிமைத்தனநடவடிக்கைகளிற்காக சர்வதேச நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட முதலாவது நபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2002 முதல் 2003 வரை கொங்கோவின் கனியவளங்கள் நிறைந்த பகுதியான இட்டுரியில் இடம்பெற்ற குற்றங்களிற்காகவே சர்வதேச நீதிமன்றம் கிளர்ச்சி தலைவருக்கு 30 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

Related posts: