கேரளாவில் கனமழை:  26 பேர் பலி!

Friday, August 10th, 2018

கேரள மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை வரையில் 26 பேர் பலியாகினர். இதில் 17 நபர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஆவர்.

இதனிடையே, கடந்த இரண்டு நாள்களில் வீடுகளை விட்டு வெளியேறிய 10,000 பேர் 157 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

கனமழையால் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து மாநிலமெங்கும் உள்ள 22 அணைகள் மற்றும் நீர்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் அடிமாலி நகரில் நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது. கொச்சி மாவட்டத்தில் உள்ள இடமலையாறு அணையில் முழு கொள்ளளவான 169 மீட்டரையும் தாண்டி 169.5 மீட்டர் அளவுக்கு தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து, அங்கிருந்து பெருமளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

முதல்வர் ஆலோசனை: இதற்கிடையே, மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன், முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளத்தில் வெள்ள நிலவரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக 22 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் ஒரே சமயத்தில் திறக்கப்பட்டுள்ளன. காக்கி அணைத்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், குட்டாநாடு பகுதியில் நீர்மட்டம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மழை வெள்ள மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல்படைகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

வயநாடு மாவட்டத்தில் குக்கிராமப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக கடற்படை ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறோம். மீட்புப் பணிகளுக்காக நிதியுதவி கோரி விரிவான தகவல்களுடன் கூடிய தீர்மானத்தை மத்திய அரசிடம் வழங்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார் அவர்.

Related posts: