கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் தாய்லாந்து அரசு சட்ட அனுமதி!

Friday, June 10th, 2022

கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் தாய்லாந்து அரசு சட்ட அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் கஞ்சாவுக்கு சட்ட அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடாக தாய்லாந்து திகழ்கிறது.

இதுவரை உலக அளவில் உருகுவே மற்றும் கனடா ஆகிய நாடுகள் மட்டும் தான் கஞ்சாவுக்கு சட்ட அனுமதி வழங்கியுள்ளன.

கஞ்சாவிற்கு தீவிர தேவை எழுந்துள்ள நிலையில், வேளாண்மை மற்றும் சுற்றுலாவை வளர்க்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தாய்லாந்து அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னதாக மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை பயன்படுத்த தாய்லாந்து 2018ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இனி கடைகளில் குளிர்பானங்கள், இனிப்புகள் மற்ற இதர பொருள்களில் கஞ்சாவை கலந்து விற்கவும் தாய்லாந்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுவெளியில் கஞ்சா புகைக்க அந்நாட்டு அரசு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. மருத்துவ நலன்களை கருத்தில் கொண்ட கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறிய தாய்லாந்து அரசு, பொதுவெளியில் கொண்டாட்டத்திற்காக பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டால் மூன்று மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து இதுவரை கஞ்சா பயன்பாட்டிற்கான குற்றத்தில் தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 4,000 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்தில் பாரம்பரியமாகவே உள்ளூர் வாசிகள் கஞ்சாவை மருத்துவத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இனி வரும் காலங்களில் இந்த கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு வரும் என அந்நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: