ஒரே நாளில் 484 அகதிகள் மீட்பு!

Thursday, July 26th, 2018

மத்தியதரைக் கடல் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த 484 அகதிகளை ஒரே நாளில் மீட்டுள்ளதாக ஸ்பெயின் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்பெயின் கடல்பகுதி பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஸ்பெயின் மற்றும் மொராக்காவுக்கு இடைப்பட்ட மத்தியதரைக் கடல் பகுதியில், 30 படகுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த 484 அகதிகள் ஒரே நாளில் மீட்கப்பட்டனர். தரம் குறைந்த படகுகளில், ஜிப்ரால்டர் ஜலசந்தி மற்றும் அல்போரான் பகுதி வழியாக அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி மத்தியதரைக் கடல் வழியாக ஏராளமான அகதிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமான படகுகளில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்களின்போது விபத்துகள் ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச குடியேற்ற அமைப்பின் புள்ளிவிவரப்படி, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1,489 அகதிகள் மத்தியதரைக் கடல் பகுதியில் உயிரிழந்தனர். அவர்களில் 294 பேர் ஸ்பெயினில் அடைக்கலம் தேடி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: