ஒருமைப்பாட்டை குலைப்பதே பாகிஸ்தானின் நோக்கம்: இந்தியா குற்றச்சாட்டு!

Friday, September 7th, 2018

பயங்கரவாதத்தின் மூலம் இந்தியா கடைப்பிடித்து வரும் பிராந்திய ஒருமைப்பாட்டை குலைப்பதே பாகிஸ்தானின் நோக்கம் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

ஐ.நா. சபையின் உயரதிகாரிகள் பங்குபெற்ற கூட்டம், அதன் தலைமையிடமான நியூயார்க்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி பேசியதாவது:

காஷ்மீரை இந்தியா தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதுடன், அங்கு வாழும் மக்களுக்கு அடிப்படை உரிமைகளையும் வழங்க மறுத்து வருகிறது. முக்கியமாக, அவர்கள் இந்தியாவின் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுத்து வாழ்வதற்கான உரிமையை அந்நாடு வழங்க மறுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீன மக்களைப் போலவே, காஷ்மீர் மக்களும் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர் என்று அவர் பேசினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரிகளுள் ஒருவரான ஸ்ரீனிவாஸ் பிரசாத் கூறியதாவது:

மக்களுக்கான உரிமைகளைப் பற்றியும், அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் மாநாடுகளில் பேசுவது மட்டும் போதாது. அண்டை நாடுகளுக்கிடையேயும், உலக நாடுகளுக்கிடையேயும் அமைதியை நிலைநாட்ட சரியான கொள்கைகளை வகுத்து, அவற்றைக் கடைப்பிடிப்பதும் அவசியம். இந்தியா தனது அண்டை நாடுகளுடனும், மற்ற நாடுகளுடனும் பேணி வரும் பிராந்திய ஒருமைப்பாட்டைக்’ குலைப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக பயங்கரவாதத்தையும், பயங்கரவாதக் குழுக்களையும் அந்நாடு ஆதரித்து வருகிறது.

உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகவே இந்தியா கருதி வருகிறது. காஷ்மீரிலுள்ள மக்கள் அனைவருக்கும், அனைத்து விதமான உரிமைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதும், வருங்காலத்திலும் ஜம்மு-காஷ்மீர் இந்திய நாட்டின் ஒரு பகுதியாகவே நீடிக்கும். புத்தர், மகாவீரர், மகாத்மா காந்தி போன்ற வரலாற்றின் சிறந்த ஆசிரியர்களை உலகிற்குத் தந்த பெருமை இந்தியாவைச் சேரும். உலக நாடுகளிடையே அமைதியை நிலைநாட்டுவதே இந்தியாவின் ஒரே கொள்கை. இந்தக் கொள்கையின் காரணமாகவே பல்வேறு மொழிகளையும், கலாசாரங்களையும் கொண்ட மக்கள் இந்திய நாட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். புத்தர் பிறந்த புனிதத்தலம் இந்திய நாட்டில் உள்ளது. அதே இந்திய நாட்டில் தான், இந்தோனேசியாவுக்கு அடுத்து அதிகமான முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒருமைப்பாடே இந்தியா அமைதி வழியில் நடப்பதற்கான அடிப்படைக் காரணம் என்று பிரசாத் தெரிவித்தார்.

Related posts: