ஏற்க முடியாது  – ரஷ்யா திட்டவட்டம்!

Friday, August 10th, 2018

பிரித்தாணியாவில் நடைபெற்ற நச்சுத் தாக்குதல் விவகாரத்தோடு தொடர்புபடுத்தி, அமெரிக்கா தங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதை ஏற்க முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது:

ஏற்கெனவே, எங்கள் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் சட்டத்துக்குப் புறம்பானவை என்பது எங்கள் நிலைப்பாடு ஆகும்.

இந்த நிலையில், பிரிட்டன் நச்சுத் தாக்குதலை எங்களுடன் தொடர்புபடுத்தி, அதற்காக எங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா கூறுவது, முற்றிலும் ஏற்புடையது அல்ல என்றார் அவர்.

1991-ஆம் ஆண்டின் ரசயான மற்றும் உயிரி ஆயுதப் போர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க அரசு அறிவித்துள்ள பொருளாதாரத் தடைகள், இரு நாடுகள் இடையிலான தூதரக உறவை முடக்குவதற்கான ஆரம்பமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிகின்றனர்.

இதுகுறித்து அரசியல் நிபுணர்களை மேற்கோள் காட்டி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்ததாவது:

நச்சுத் தாக்குதல் தொடர்பான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட 90 நாள்களுக்குள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று ரஷியா வாக்குறுதி அளிக்க வேண்டும். மேலும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து சர்வதேச நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொள்ளவும் அந்த நாடு அனுமதி அளிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்படும். மேலும், ரஷிய விமானங்கள் அமெரிக்காவில் தரையிறங்குவதற்கான அனுமதியும் மறுக்கப்படும். இதன் காரணமாக, இருதரப்பு தூதரக உறவுகளும் முடங்கிவிடும் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

Related posts: