ஏமன் நாட்டில் கூட்டுப்படை தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் 900 பேர் பலி – முக்கிய நகரம் மீட்பு

Tuesday, April 26th, 2016

ஏமனில் அரபு நாடுகளின் கூட்டுப்படைகளின் தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் 900 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மொகல்லா நகரை ஓராண்டுக்கு பிறகு கூட்டுப்படைகள் மீட்டன.

உள்நாட்டு போர்அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் அப்த் ரபுஹ் மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 1½ ஆண்டுகளாக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அல்கொய்தா தீவிரவாதிகளும் இந்த சண்டையில் குதித்தனர். இதனால், ஏமன் நாட்டின் பல முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

குறிப்பாக எண்ணெய் வளம் மிக்க தெற்கு மாகாணத்தின் துறைமுக தலைநகரான மொகல்லாவை கடந்த ஆண்டு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். மேலும், ஏமன் நாட்டின் பல பகுதிகளில் கிளர்ச்சியாளர்களும், ஐ.எஸ். தீவிரவாதிகளும் வேகமாக முன்னேறி வந்தனர். இதனால் சவுதி அரேபியாவின் உதவியை அதிபர் மன்சூர் ஹாதி நாடினார்.

கூட்டுப்படை தாக்குதல் இதைத்தொடர்ந்து சவுதி அரேபியா தலைமையில் கூட்டு ராணுவப் படை அமைக்கப்பட்டது. இந்த படையினர் கடந்த 6 மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் மீது வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தினர். போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. அதே நேரம் ஏமன் ராணுவம் தரை வழியாகவும் தாக்குதலை தொடுத்தது. இதனால் சமீப காலமாக ஏமன் அரசுக்கு எதிராக போராடியவர்களின் கை சற்று தாழ்ந்து வந்தது.

இதற்கிடையே ஐ.நா.சபை மேற்கொண்ட சமரச முயற்சியால் அங்கு கடந்த 11-ந்தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், போர் ஒப்பந்தத்தை மீறி தீவிரவாதிகள் ராணுவத்துக்கு எதிராக தாக்குதலை மீண்டும் தொடங்கினர்.900 தீவிரவாதிகள் பலி இந்தநிலையில் அரபு கூட்டுப்படைகளும், ஏமன் அரசு படைகளும் நேற்று முன்தினம் இரவு ஒரே நேரத்தில் மொகல்லா நகரில் தாக்குதல் நடத்தின. குறிப்பாக, அல்கொய்தா தீவிரவாதிகள் முகாமிட்டு இருந்த பகுதிகளை முன்னேறிச் சென்று அரசு படைகள் தாக்குதல் நடத்தின. அப்போது, போர் விமானங்கள் சரமாரியாக அவர்கள் மீது குண்டுகளை வீசின.

இந்த இரட்டை தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்கள் பலர் உள்பட 900 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். கூட்டுப்படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாத தீவிரவாதிகள் மொகல்லா நகரை விட்டு தப்பியோடினர். இதையடுத்து மொகல்லா நகரை அரசு படைகள் முழுமையாக தங்கள் வசம் கொண்டு வந்தன.

இந்த தகவலை அரபு கூட்டுப்படை ராணுவ வட்டாரங்கள் உறுதி செய்தன. மொகல்லா நகரை அரபு கூட்டுப்படைகள் மீட்டு இருப்பது ஏமன் அதிபர் மன்சூர் ஹாதிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

Related posts: