எமக்கு ஏதாவது நேர்ந்தால் அதிமுகதான் பொறுப்பு- சசிகலா புஷ்பா!

Tuesday, August 2nd, 2016

எனக்கோ எனது குடும்பத்தாருக்கோ ஏதாவது நேர்ந்தால் அதற்கு அதிமுகதான் பொறுப்பு என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா பேட்டியளித்துள்ளார்.

ஜெயலலிதா எனது கன்னத்தில் அறைந்தார். காலை முதல் மாலை வரை நான் துன்புறுத்தப்பட்டேன். எனது செல்போனையும் பறித்துக் கொண்டனர். சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்தபோது கூட, விமானத்தில் அங்கும் இங்கும் நகர விடவில்லை. சென்னையில், எனது வீட்டுக்கு செல்ல கூட அனுமதிக்கவில்லை. எனவேதான், எனது எண்ணங்களை வெளியே தெரிவிக்க பிரஸ் மீட் கூட்ட முடியவில்லை. இதற்காகவே நாடாளுமன்றத்தில் வைத்து பேசினேன்.

நான் கஷ்டப்பட்டு இந்த பதவிக்கு வந்தேன். அவர்கள் கேட்டதும் திருப்பி தர முடியாது. எனவே நான் எனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். இதுகுறித்து, எனது கணவரிடம் கூறியபோது, தமிழகத்தில் முதல்வரை எதிர்த்து வாழ முடியாது என கணவர் எச்சரித்தார். செரினா மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது, சசிகலா கணவரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இப்படியெல்லாம் பழி வாங்கப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில், எனக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என்பதை உணர்ந்துள்ளேன். எந்த வகையில் ஆபத்து வரும் என்று தெரியாது. எனவேதான், நான், பாதுகாப்பு கேட்டு ராஜ்யசபாவில் பேசினேன். எனக்கோ, எனது கணவருக்கோ, எனது மகனுக்கோ ஆபத்து நேர்ந்தால், அதற்கு அதிமுகதான் பொறுப்பு.அதற்கு நாடாளுமன்றமும், மீடியாக்களும்தான் சாட்சி.

நான் இந்த விவகாரம் குறித்து பேசியபோது, ராஜ்யசபாவில் காங்கிரசும், திமுகவும் ஆதரவு அளித்தன. இதை நான் எதிர்பார்க்கவேயில்லை. ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை என்ற அடிப்படையில் அரசியலை கடந்து அவர்கள் சப்போர்ட் செய்தனர். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று, அமைச்சர் வெங்கய்யாநாயுடு கூறியுள்ளார்.

கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிதான். இனிமேல் ஃப்ரியாக பணியாற்ற முடியும். 2 மாதம் முன்பே பார்லியில் நான் எதுவும் பேச கூடாது என உத்தரவிட்டனர். மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று, ஜெயலலிதா பற்றி புகழ்ந்து பேசினேன். அப்போதே என்னை ஏன் பேசவிட்டீர்கள் என சென்னையில் இருந்து பூங்குன்றன் என்பவர் போன் செய்ததாக கட்சியின் தலைவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

2 மாதங்கள் முன்பிருந்தே, எனது பதவியை பறிக்க அதிமுக தலைமை திட்டமிட்டிருந்தது. இந்த சீட்டை யாருக்கோ தர முடிவு செய்துள்ளனர். எனவேதான் என்னை அசிங்கப்படுத்தி வெளியே அனுப்ப திட்டமிட்டுள்ளனர். திருச்சி சிவா விவகாரத்திற்கும் என்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதற்கும் தொடர்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts: