மியான்மர் அரசியலில் திடீர் திருப்பம்:  சூ கியின் சாரதி அதிபர் ஆகிறார்?

Friday, March 11th, 2016

மியான்மர் நாட்டின் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு சூ கியின் வாகன சாரதி அதிபர் ஆகிறார்.

மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் என்.எல்.டி. என்று அழைக்கப்படுகிற சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

ஆனால் மார்ச் மாதம் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்தான் அங்கு சூ கி கட்சியின் ஆட்சி அமையும் என கூறப்பட்டது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சி அபார வெற்றி பெற்றபோதும்கூட, சூ கி அதிபர் ஆக முடியாதபடிக்கு அங்கு அரசியல் சட்டம் தடை செய்துள்ளது. அந்த நாட்டின் அரசியல் சட்டத்தின்படி அங்கு வெளிநாட்டினரை குடும்ப உறுப்பினராக கொண்டுள்ளவர்கள், அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

சூ கியின் கணவரும், 2 மகன்களும் இங்கிலாந்து குடியுரிமைபெற்றவர்கள் ஆவர். எனவே சூ கி அதிபர் தேர்தலில் நிற்க முடியாத நிலை உருவானது. தேர்தல் நடந்தபோதே சூ கி, “நான் அதிபருக்கு மேலாக இருந்து ஆட்சி நடத்துவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே அங்கு என்ன நடக்கப்போகிறது என்பது கடந்த 4 மாதங்களாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அங்கு தற்போதைய அதிபர் யூ தீன் சீன் பதவிக்காலம், வரும் 30-ந் திகதி முடிகிறது.

இதையடுத்து புதிய அதிபர் தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் வேட்பாளராக சூ கியின் முன்னாள் சாரதியான யூ கதின் கியாவ் (வயது 69) அறிவிக்கப்பட்டுள்ளார். இது யாரும் சற்றும் எதிர்பாராத திடீர் திருப்பமாக கருதப்படுகிறது.

ஒன்றாக படித்தவர் புதிய அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யூ கதின் கியாவ், சூ கியின் நம்பிக்கைக்குரிய அரசியல் ஆலோசகர், பள்ளிக்கூடத்தில் அவருடன் ஒன்றாக படித்தவர் ஆவார். யூ கதின் கியாவ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். அவரது மனைவி சூ சூ, மியான்மர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.  வெற்றி உறுதி

இவரது தேர்வு குறித்து மியான்மர் அரசியல் ஆய்வாளர் தாண்ட் மியிண்ட் யூ ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிக்கையில், “அதிபர் தேர்தல் வேட்பாளராக யூ கதின் கியாவ் தேர்வு செய்யப்பட்டிருப்பது நட்சத்திர தேர்வு ஆகும். அவர் தூய்மையானவர். நேர்மையானவர்” என கூறி உள்ளார்.

புதிய அதிபர் தேர்தலில் யூ கதின் கியாவ் வெற்றி பெறுவது உறுதி என மியான்மரில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Related posts: