எனக்கு உத்தரவிட முடியாது – டிரம்ப் ஆவேசம்!

Wednesday, December 14th, 2016

”சீனா எங்களுக்கு உத்தரவிட முடியாது. இரு தரப்பு வர்த்தகத்தில், சலுகைகளை ஏற்படுத்தாதவரை, அந்நாட்டுடனான, ‘ஒரு சீனா’ கொள்கையைத் தொடர்வதில் அர்த்தமும் இல்லை,” என, அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள, டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தைவான் அதிபர் சாய் இங்வென், சமீபத்தில், டொனால்டு டிரம்பின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அவருக்கு தொலைபேசி அழைப்பு கொடுத்தார்.

அவருடன் பேசியதற்காக, டிரம்பை சீனா கண்டித்தது. இது குறித்து, நேற்று முன்தினம் இரவு, டிரம்ப் ஒரு, ‘டிவி’ சேனலுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது: என்னை, சீனா கட்டுப்படுத்த முடியாது. எனக்கு தைவானிடமிருந்து அழைப்பு வந்தது; நான் பேசினேன். ‘வெற்றிக்கு வாழ்த்துக்கள்’ என்பதான பேச்சு அது; சுருக்கமான, இனிமையான பேச்சு. நான் யாருடனும் பேசக் கூடாது என, இன்னொரு நாடு எப்படி சொல்ல முடியும்? கடந்த, 1979 முதல் சீனாவுடனான நட்பை தைவான் முறித்துக் கொண்டதை, நாங்கள் அறிவோம்; அந்த நிலைப்பாட்டை மதித்து, வர்த்தக உறவைத் துண்டித்தோம்.

அதே சமயம், சீனா – அமெரிக்க வர்த்தகத்தில், சலுகைகள் ஏதும் ஏற்படுத்தாமல், நாங்கள் இன்னும், ‘ஒரு சீனா’ கொள்கையை தொடர்வதில் அர்த்தமில்லை.தெற்கு சீனக் கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கம், சீனாவின் எல்லைகளில் அதிக வரி வசூலிப்பு ஆகியவற்றால், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். உண்மையைச் சொல்வதெனில், வட கொரியா விவகாரத்தில், சீனா எங்களுக்கு உதவவில்லை.

சீனாவிடம் அணு ஆயுதம் உள்ளது. தென் கொரிய படைகள் உள்ளன, பிரச்சினையை மிக எளிதாகக் கையாண்டிருக்கலாம். எதுவுமே அந்நாடு செய்யவில்லை. இதற்கு மேலும் அந்நாடு எங்களைக் கட்டுப்படுத்த, எனக்கு உத்தரவிட முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் பதவிக்குப் போட்டி இடுவதற்கு முன்பாகவே, சீனாவின் நிதிக் கொள்கை மற்றும் தெற்கு சீனக் கடல் பகுதியில், அந்நாட்டின் ஆக்கிரமிப்பு ஆகிய விஷயங்களுக்கு, ‘டுவிட்டரில்’ டிரம்ப் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கடந்த, 1844 முதல், அமெரிக்கா எப்போதுமே, கம்யூனிச நாடான சீனாவுடன் நட்பு பாராட்டி வந்துள்ளது. இடையிடையே நடந்த சில பிரச்சினைகளால், இரு நாடுகளும், சில மறைமுக சண்டைகளை நடத்திக் கொண்டனவே தவிர, நிரந்தரமாகப் பிரியவில்லை. ஆனால், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப், சீனாவுக்கு எதிராக, கடுமையாகப் பேசி இருப்பது, உலக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

trump-vs-putin

Related posts: