உக்ரைன் உள்நாட்டுச் மோதலில் 9,333 பேர் உயிரிழப்பு!

Saturday, April 30th, 2016

உக்ரைன் உள்நாட்டுப் போரில் இதுவரை 9,333 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

உக்ரைன் பிரச்னை தொடர்பாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில், அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் டாயேபுரூக் ஸரீஹூன் தெரிவிக்கையில் –

உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையில் 9,333 பேர் உயிரிழந்தனர். மேலும் 21,396 பேர் காயமடைந்தனர். கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் உக்ரைனில் அமைதி நிலவி வந்தாலும், கடந்த சில வாரங்களாக அங்கு மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது.
டொனெட்ஸ்க் நகருக்கு அருகே உள்ள ஒலெனிவ்கா என்னுமிடத்தில் கடந்த புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட எறிகுண்டுத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
உக்ரைன், ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் மேற்கொண்ட மின்ஸ்க் அமைதி ஒப்பந்தத்தில், பதற்றம் நிறைந்த பகுதிகளை சர்வதேசக் குழுவினர் கண்காணிக்க ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும், அத்தகைய பகுதிகளுக்கு சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க உக்ரைன் அரசும், கிளர்ச்சியாளர்களும் மறுத்து வருகின்றனர் என  தெரிவித்துள்ளார்..
கூட்டத்தில் பேசிய உக்ரைன் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வாடிம் பிரிஸ்தாய்கோ
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷிய ராணுவ வீரர்கள், வெளிநாட்டுப் படையினர் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுக்கள் அடங்கிய பலம் வாய்ந்த கூட்டுப் படையை ரய்ஷியா உருவாக்கியுள்ளது.
அந்தப் படைக்கு சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்களையும் சட்ட விரோதமாக ரய்ஷியா வழங்கியுள்ளது.
ரய்ஷிய ராணுவத் தளபதிகள் அந்தப் படையை நேரடியாக வழி நடத்துகின்றனர் என்றார் அவர்.
கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான ரய்ஷியத் தூதர் விடாலி சுர்கின், உக்ரைன் விவகாரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், ரய்ஷியாவுக்கும் எதிராக பிரசாரம் மேற்கொள்வதற்கான தளமாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.

Related posts: