இஸ்ரேல் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் யுனெஸ்கோ தீர்மானம் வெற்றி!

Thursday, October 20th, 2016

 

கிழக்கு ஜெருசலத்தின் அல் அக்ஸா பள்ளிவாசலை சூழ உள்ள பதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள இஸ்ரேலின் கொள்கைகளை விமர்சிக்கும் தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகளின் கலாசார அமைப்பான யுனெஸ்கோ நிறைவேற்றியுள்ளது.

பலஸ்தீன தலைவர்கள் இந்த தீர்மானத்தை வரவேற்றிருக்கும் நிலையில், புனிதத் தலத்தின் யூதத் தொடர்பு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் குழு நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானமே நேற்று முன்தினம் இடம்பெற்ற புதிய வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டதாக பாரிஸை தளமாகக் கொண்ட யுனெஸ்கோவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இந்த தீர்மானத்தை எதிர்த்து இஸ்ரேல் ஏற்கனவே யுனெஸ்கோவுடனான ஒத்துழைப்புகளை இடைநிறுத்தியுள்ளது.

நிறைவேற்றப்பட்டிருக்கும் ஆவணத்தில் இஸ்ரேலிய நிர்வாகத்தில் இருக்கும் பலஸ்தீன மதத் தலங்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதோடு ஆவணம் முழுவதிலும், முஸ்லிம்கள் அழைக்கும் அல் அக்ஸா வளாகம் என்ற பெயர் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான அல் அக்ஸா வளாகத்தை யூதர்கள் டெம்பில் மெளன்டன் என்று அழைக்கின்றனர்.

யுனெஸ்கோவின் பலஸ்தீன பிரதித் தூதுவர் முனீஸ் அனஸ்தாஸ் குறிப்பிடும்போது, “கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு சக்தி என்பதை இந்த தீர்மானம் ஞாபகமூட்டுவதோடு, மதத்தலங்களில் அது மேற்கொள்ளும் அகழ்வு நடவடிக்கைகள் உட்பட அனைத்து வன்முறைகளையும் கண்டிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். புனிதத் தலத்தில் முஸ்லிம்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து யுனெஸ்கோ தீர்மானத்தில் இஸ்ரேலை கண்டித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் ஓர் ஆக்கிரமிப்பு சக்தி என்பதையும் அது அங்கீகரித்துள்ளது.

அல்ஜீரியா, மொரோக்கோ, எகிப்து, லெபனான், ஓமான், கட்டார் மற்றும் சூடான் நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தீர்மானம் ஆரம்பத்தில் 24 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக ஆறு வாக்குகள் பதிவானதோடு, 26 நாடுகள் வாக்களிப்பதில் கலந்துகொள்ளவில்லை.

2011 ஆம் ஆண்டிலேயே பலஸ்தீனம் யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்றது. இதனை அடுத்து அமெரிக்க யுனெஸ்கோவுக்கு நிதி வழங்குவதை இடைநிறுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

coltkn-10-20-fr-03154545406_4890208_19102016_mss_cmy

Related posts: