ஆயுததாரிகளால் சிறைச்சாலை உடைத்து 28 பேர் விடுவிப்பு!

Monday, August 29th, 2016

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதி நகரான மராவியில், சிறைச்சாலை ஒன்றை உடைத்த இஸ்லாமிய ஆயுதக்குழுவினர், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 பேரை விடுதலை செய்துள்ளனர் என, சிறைச்சாலை அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர்.

மௌடே என்ற ஆயுதக்குழுவைச் சேர்ந்த ஆயுதந்தரித்த 50 பேர், இந்தச் சிறைச்சாலைக்குள் சனிக்கிழமை புகுந்து, தங்களது குழுவைச் சேர்ந்த 8 பேரை விடுதலை செய்துள்ளனர். இவர்கள், ஒரு வாரத்துக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு அவர்கள் விடுவிக்கப்படும் போது, வேறு குற்றங்களுக்காக அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 பேரும் தப்பித்துள்ளனர்.

குறித்த ஆயுதக்குழுவினர், தாங்கள் பயணித்த வானில் வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் கொண்டு சென்ற போது, இராணுவச் சோதனைச் சாவடியொன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கத்தோலிக்கர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிலிப்பைன்ஸில், இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் சில செயற்பட்டு வருவதோடு, தனிநாடு கோரியும் போராடி வருகின்றன. இதன் காரணமாக, அக்குழுக்களால் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும்.

2009ஆம் ஆண்டில், சிறைச்சாலையொன்றை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள், 31 பேரை விடுத்திருந்தமை, இதற்கு முன்னர் இடம்பெற்ற பாரிய சிறைச்சாலை உடைப்பாகக் கருதப்படுகிறது.

Related posts: