இறுதி பயணத்தை ஆரம்பித்த ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல்!
Sunday, July 24th, 2016
இந்திய கடல் எல்லையை, 30 ஆண்டு காலமாக கம்பீரமாக பாதுகாத்து வரும், ‘ஐ.என்.எஸ்., விராட்‘ விமானம் தாங்கி போர்க்கப்பல், தன் அதிகாரப்பூர்வ இறுதி யாத்திரையை நேற்று துவக்கியது.
பிரிட்டனிடம் இருந்து, 1987ல் வாங்கப்பட்டு, இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட, ‘விராட்‘ போர்க்கப்பல், உலகில் வெற்றிகரமாக இயங்கி வரும் பழமையான விமானம் தாங்கி கப்பல் என்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது, வயது மூப்பு காரணமாக, ‘விராட்‘ கப்பல் விடைபெற வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. கடந்த, 1959ல், ‘ஐ.என்.எஸ்., ஹெர்ம்ஸ்‘ என்ற பெயரில், பிரிட்டன் கடற்படையில் சேர்ந்த இக்கப்பல், 1982ல் நடந்த பாக்லாந்து போரில் முக்கிய பங்காற்றியது. 1985ல், பிரிட்டன் ராணுவம் விடை கொடுத்த பின், 1987ல், இந்தியா அதை வாங்கி கடற்படையில் சேர்த்தது. இந்தியாவின், முதல் விமானம் தாங்கிக் கப்பல் என்ற பெருமையை பெற்ற இந்தக் கப்பல், 30 ஆண்டு காலம், இந்திய கடற்படை சேவை உட்பட தன், 60 ஆண்டுகால கடல் எல்லை பாதுகாப்பு சேவையை, கேரள மாநிலம், கொச்சியில், ஜூலை, 27ல் நிறைவு செய்கிறது. அதன் கடைசி பயணம், மும்பையில் இருந்து நேற்று துவங்கியது.
கொச்சியை அடைந்ததும், அதிலிருக்கும் ராணுவ தளவாடங்கள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் ஏற்படும் இடைவெளி பாதுகாப்பாக அடைக்கப்படும். அந்த கப்பலை, அருங்காட்சியகமாக மாற்ற ஆந்திரா உட்பட பல மாநிலங்கள் போட்டி போட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசு இன்னும் அதுபற்றி முடிவு எடுக்கவில்லை.
Related posts:
சர்ச்சையில் சிக்கிய அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கொரோனா வைரஸ் தெற்றின் ஆதிக்கம் உச்சம் – உலகளவில் இதுவரை 2 இலட்சத்தை கடந்த உயிரிழப்புகள் - உலக சுகாத...
ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களில் 2 ஆம் இடத்தில் இலங்கை!
|
|
|


