இரு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இடையில் விவாதம்!

Wednesday, May 24th, 2017

ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் மற்றும் குடியேற்றம் தொடர்பில் இரு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இடையில்  காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்றினால்  கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் மற்றும் ஸ்கொட்லாந்து சன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரூத் டேவிட்சன் (Ruth Davidson) ஆகியோருக்கு இடையிலேயே இந்த காரசாரமான விவாதம் நடைபெற்றது.

ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தலைவரும் ஸ்கொட்லாந்து முதலமைச்சருமான நிக்கோலா ஸ்ரேர்ஜன் இவ்விடயம் தொடர்பில் விவாதித்த போது, “ரூத் டேவிட்சன் ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பில் அதிகமான கருத்துக்களை பகிர்கிறார். அதனால் எனக்கு விளிம்பு முனையில் கூட இவ்விடயம் தொடர்பில் உரையாற்ற முடியாதுள்ளது” என தெரிவித்தார்.

எனினும், அதனைத் தொடர்ந்து உரையாற்றிய நிக்கோலா “ரூத் டேவிட்சன் தனது கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை கேடயமாக பயன்படுத்துகிறார்” என தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த ரூத் டேவிட்சன், “கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட போது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என முழு பிரித்தானியாவும் வாக்களித்து விட்டது. ஆயினும் நிக்கோலா அதனை பொருட்படுத்தவில்லை” என தெரிவித்தார்.

குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்கொட்லாந்து தொழிற்கட்சித் தலைவர் கேஸியா டக்டேல் (Kezia Dugdale), “தொழிற்கட்சியே மக்களை புரிந்து நடந்துகொள்கிறது. இவ்வாறிருக்க ஏன் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு நீங்கள் துணை நிற்கின்றீர்கள் மக்களே? அத்துடன் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியும் கொன்சர்வேற்றிவ் கட்சியின் முரண்பட்ட கொள்கைகளுக்கு எதிராக செயற்படும் பொருட்டு ‘ஸ்கொட்லாந்தின் சுதந்திரம்’ எனும் விடயத்தை கையில் எடுத்துள்ளது” என தெரிவித்தார்.

குறித்த விவாதத்தில், ஸ்கொட்லாந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் வில்லி ரொனீ (Willie Rennie), ஸ்கொட்லாந்து பசுமைக் கட்சியின் சார்பாக பட்ரிக் ஹார்வீ (Patrick Harvie) யூகிப் கட்சியின் சார்பாக டேவிட் கோபன் (David Coburn) ஆகியோரும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: