ஜெயலலிதாவின் கைரேகைப் பதிவுக்கு தேர்தல் ஆணையம் சம்மதம்!

Sunday, October 30th, 2016

தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்களுக்கான அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா, கையெழுத்திடாமல் கைரேகை வைத்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவிருக்கும் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்களில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கையெழுத்திட வேண்டிய இடங்களில் அவரது இடது கை பெருவிரல் ரேகை பதிக்கப்பட்டிருப்பது ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு கட்சித் தலைவரின் ஒப்புதலை உறுதிசெய்யும் “B” படிவத்தில், அவரது கையெழுத்தைப்பெற்று இணைக்க வேண்டும்.

இந்த மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அக்டோபர் 28-ஆம் தேதி அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். அவர்களது “B” படிவங்களில் ஜெயலலிதாவின் கையெழுத்திற்குப் பதிலாக அவரது இடது கைப் பெருவிரல் ரேகைப் பதிவு இடம்பெற்றிருந்தது.

_92151087_jayathumb

உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களில் ஜெயலலிதாவின் கையெழுத்திற்குப் பதிலாக, அவரது ரேகைப் பதிவு இடம்பெற்ற தகவல் வெளியானது.

ஜெயலலிதா தான் ரேகையைப் பதிவுசெய்தார் என்பதற்கு சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் பி. பாலாஜி சான்றிதழ் அளித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பாபு கே ஆபிரகாம் சாட்சிக் கையெழுத்தை இட்டுள்ளார்.

“இங்கே ஒப்புதல் அளித்திருப்பவர், சமீபத்தில்தான் ”ட்ராகியோஸ்டமி’ சிகிச்சைக்கு உள்ளாயிருப்பதால் அவரது வலது கை வீங்கியுள்ளது. அவரால் கையெழுத்திட முடியாது. ஆகவே, அவர் தனது இடது கைப் பெருவிரல் ரேகையை எனது முன்னிலையில் தானாகவே பதித்தார்” என பேராசிரியர் பாலாஜி அந்தப் படிவத்தில் குறிப்பிட்டிருந்தார்.

வியாழக்கிழமையன்று இந்த ரேகைப் பதிவு பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்றே இந்த ரேகைப்பதிவு பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திலிருந்து வெளியாகியுள்ள கடிதப் போக்குவரத்து ஒன்று காட்டுகிறது.

_92151088_jayathub1

ஜெயலலிதா கையெழுத்திற்குப் பதிலாக, கை ரேகையைப் பதிவுசெய்யலாம் என்பதற்கு ஒப்புதல் அளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள ஒப்புதல் கடிதத்தில், அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஒப்புதல் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அதிமுக-விற்கும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் தெரிவிக்கலாமென்றும் அந்த ஒப்புதல் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ஜெயலலிதாவுக்கு “ட்ராகியோஸ்டமி” எனப்படும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது இதுவரை மருத்துவ வெளியான மருத்துவ அறிக்கைகளில் கூறப்படாத நிலையில், அரசு மருத்துவரின் சான்றிதழில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related posts: