இரு குடும்பங்களை சேர்ந்த 11பேர் சுட்டுக்கொலை!

Monday, July 11th, 2016

மெக்சிகோவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போதைபொருள் கடத்தல் கும்பல் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய குழுக்களை சேர்ந்தவர்கள் திடீரென குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அங்கு வாழும் அப்பாவி மக்களை சுட்டு கொன்று விடுகின்றனர்.

இந்த நிலையில் டமாலிபாஸ் மாகாணத்தின் தலைநகரான சியுடேட் விக்டோரியா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு நேற்று அதிகாலையில் வந்த மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரை துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில் அவர்கள் அனைவரும் படுக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாகினர். பலியானவர்களில் 6 சிறுமிகளும் அடங்குவர்.  அதைத்தொடர்ந்து மற்றொரு வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் ஒரு சிறுமி உள்பட 3 பேரை சுட்டுக்கொன்றனர். மேலும் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஒரு வீட்டினுள் கையெறி குண்டுகளை வீசி, பின்னர் அந்த வீட்டை தீயிட்டு கொளுத்தினர். இதில் யாரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் இல்லை.

இதற்கிடையில், பஸ் நிலையம் ஒன்றில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை மர்ம நபர்கள் சிலர் சுட்டுக்கொன்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களுக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. மேலும் எந்த ஓர் அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.

Related posts: