இந்தோனேசியாவில் மீண்டும் நில அதிர்வு: பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது!

Friday, August 10th, 2018

இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து, நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 319-ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் 6.9 அலகுகளில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் லோம்போக் தீவு மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் சக்தி வாய்ந்த பின்னதிர்வுகள் உணரப்பட்டன. இது, ரிக்டர் அளவுகோலில் 5.9-ஆகப் பதிவாகியது. இதனால், மக்கள் பீதியடைந்து முகாம்களை விட்டு ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான வீடுகள், மசூதிகள், வர்த்தக நிறுவன கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இவை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது கிடைத்த தகவல்களின்படி நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 319-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,400 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாள்கள் ஆகியும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்பு குழுவினர் சென்றடைவது சவாலானதாகவே இருந்தது. தற்போதுதான், அப்பகுதிகளை நெருங்கியுள்ள மீட்பு குழுவினர் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

நிலநடுக்கத்தால் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியான நிலையில் இடம்பெயர்ந்த 1,50,000-க்கும் மேற்பட்டோர் நிவராண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் உணவு மற்றும் மருத்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோர் தார்ப்பாய்கள் மூலம் கூடாரங்கள் அமைத்து அதில் தங்கள் இரவுப் பொழுதுகளை கழித்து வருகின்றனர் என்றார் அவர்.

இதற்கிடையே இந்தோனேசிய செஞ்சிலுவை சங்கம் தீவின் வடக்குப் பகுதிகளில் 10 நடமாடும் மருத்துவமனைகளை அமைத்து அங்கு பாதிக்கப்பட்டுவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்படும் பெரும்பாலானோர் தலைக் காயம் மற்றும் எலும்பு முறிவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செஞ்சிலுவை சங்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: