ஆஸி. வீரர்கள் இனி ஒருபோதும் என் நண்பர்கள் அல்ல – விராட் கோலி!

Wednesday, March 29th, 2017

அவுஸ்திரேலிய வீரர்கள் இனி ஒருபோதும் தனது நண்பர்களாக இருக்க மாட்டார்கள் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் 2-1 என்ற ரீதியில் வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டித் தொடரின் ஆரம்பம் முதலே விராட் கோலிக்கும் அவுஸ்திரேலிய வீரர்களுக்கும் இடையே சில உரசல்கள் தோன்றின. தனது ஆட்டமிழப்பை அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் கேலி செய்தார் என்று கோலியும், பதிலுக்கு ஆஸி. வீரர்  டேவிட் வோர்னரின் ஆட்டமிழப்பையடுத்து, தனது தோற்பட்டையைத் தொட்டுக் காட்டி கேலி செய்தார் விராட் கோலி.

எனினும், ஸ்டீவன் ஸ்மித் கோலியை கேலி செய்யவில்லை எனவும், அந்தக் காட்சி காண்பிக்கப்பட்ட கோணத்தில் அப்படித் தோற்றமளித்தது எனவும் ஆஸி. ஊடகங்கள் வாதிட்டன. மேலும் கோலியின் இந்தச் செய்கையை கடுமையாக விமர்சித்த ஊடகங்கள் ஒரு கட்டத்தில், விளையாட்டுலகின் டொனால்ட் ட்ரம்ப் என்றும் குறிப்பிட்டிருந்தன.

இது குறித்து கோலி மன்னிப்புக் கோராததைச் சுட்டிக்காட்டிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட், கோலிக்கு மன்னிப்பு என்ற ஆங்கில வார்த்தைக்கு எழுத்துக் கூட்டவும் தெரியாது என்று மிகக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தர்மசாலாவில் நடைபெற்று முடிந்த போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியது. போட்டியின் பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அவுஸ்திரேலிய வீரர்களுக்கும் தனக்கும் இடையில் இனி ஒருபோதும் நட்புறவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுயாகக் கூறினார் விராட் கோலி

Related posts: