‘அவ்டி’ கார் தலைமை நிர்வாகி கைது!

Wednesday, June 20th, 2018

வாகன புகை மாசு சோதனை தொழில்நுட்பத்தில் மோசடி செய்த வழக்கு தொடர்பாக, ‘ஆடி கார்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ரூபர்ட் ஸ்டாட்லர் நேற்று கைது செய்யப்பட்டார்.ஐரோப்பிய நாடான, ஜெர்மனியைச் சேர்ந்த, ‘வோக்ஸ்வேகன்’ கார் நிறுவனத்தின், உறுப்பு நிறுவனமாக ஆடி கார் நிறுவனம் செயல்படுகிறது. விலை உயர்ந்த சொகுசு கார்களை, ஆடி என்ற பெயரில், இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்நிலையில், வோக்ஸ்வேகன் கார்களில் இருந்து வெளியேறும் புகை மாசு கண்டறியும் சோதனையில், மாசின் அளவை குறைத்துக் காட்டும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டு, மோசடி செய்திருப்பது, 2015ல் கண்டுபிடிக்கப்பட்டது.அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆறு லட்சம் கார்களில், இந்த மோசடி கருவி பொருத்தப்பட்டு இருப்பதை, வோக்ஸ்வேகன் நிறுவனம் ஒப்புக் கொண்டது.

மேலும், அந்த நிறுவனத்தால், உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான கார்களில், முறைகேடான மென்பொருள் இணைக்கப்பட்டது தெரியவந்தது.தரக் கட்டுப்பாட்டு சோதனையின் போது, இந்த கார்கள் உமிழும் புகையின் அளவு குறைவாகவும், சாலைகளில் செல்லும்போது உமிழும் புகையின் அளவு குறைவாகவும் இருக்கும்படி, இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

ஆடி நிறுவன தயாரிப்பான, ‘ஏ6’ மற்றும், ‘ஏ7’ ரக கார்களிலும் இந்த மோசடி மென்பொருள் பொருத்தப்பட்டிருப்பதை, ஆடி நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்ட, 60 ஆயிரம் கார்களை, இந்த நிறுவனம் திரும்பப் பெற்றது.

இந்த மோசடி தொடர்பாக, ஆடி நிறுவன இன்ஜின் தயாரிப்பு பிரிவின் முன்னாள் தலைவர், உல்ப்கேங்க் ஹேட்ஸ், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஆடி கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ரூபர்ட் ஸ்டாட்லர், ஜெர்மனியில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை அவர் கலைத்துவிடக் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் கைது செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

Related posts: