பதவியை  காப்பாற்றிக்கொண்டார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்!

Saturday, April 22nd, 2017

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபை பதவி நீக்கும் அளவுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.எனினும் பணப்பரிமாற்றங்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு கசிந்த பனாமா ஆவணங்கள் பண மோசடி விவகாரத்தில் நவாஸ் ஷரீபின் மூன்று குழந்தைகளின் பெயர்கள் இருப்பது தொடர்பில் அவரது குடும்ப வர்த்தகம் குறித்தே நீதிபன்றம் விசாரணை நடத்தியது.

இந்த விடயத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்று ஷரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் பின்னணி கொண்டவை என்று அவர்கள் நிராகரித்துள்ளனர்.

எனினும் இந்த வழக்கு விசாரணை மூலம் நவாஸ் ஷரீபின் பிரதமர் பதவி பறிபோகும் நிலை இருந்ததால் கடந்த சில மாதங்களாக பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படவிருந்ததால் பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டது.

தீர்ப்பு வழங்கிய இஸ்லாமாபாத் நீதிமன்றத்தை சூழ சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான் வீதி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்து எச்சரிக்கை விடுத்ததை அடுத்தே நவாஸ் ஷரீபின் வெளிநாட்டு சொத்துகள் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இறுதியில் இணங்கியது.

கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி நவாஸ் ஷெரீப் மீதான வழக்குகள் ஆரம்பமாயின. மொத்தமாக 35 முறை இந்த விவகாரம் குறித்து நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றன. அதன் தீர்ப்பே நேற்று வழங்கப்பட்டது.கடல் கடந்த நிறுவனங்கள் ஊடே நிதிகளைக் கொண்டு லண்டனில் சொத்துகளை வாங்கியது குறித்தே இந்த விசாரணையில் அதிக அவதானம் செலுத்தப்பட்டது.

எதிர்கால அரசியல் தலைவர் என்று நம்பப்படும் நவாஸ் ஷரீபின் மகள் மரியம், அவரது புதல்வர்களான ஹஸன் மற்றும் ஹுஸைன் ஆகியோரே இந்த குற்றச்சாட்டில் தொடர்புபட்டுள்ளனர்.சட்டபூர்வமாக பணம் சேர்த்ததாக நவாஸ் ஷரீப் கூறியபோதும், கடல் கடந்த நிறுவனங்களை பயன்படுத்தி வரிகள் செலுத்துவதை தவிர்க்க சட்டவிரோதமாக பணமோசடி செய்ததாக அவர் மீது எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு பிளவுபட்டதாக இருந்தது. இதில் இரு நீதிபதிகள் பிரதமருக்கு எதிராக வாக்களித்ததோடு மூவம் இது பற்றி மேலும் விசாரணை நடத்தும் முடிவுக்கு வந்துள்ளனர்.

ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது. “அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்” என்று அவரது மகள் டிவிட்டரில் கூறியுள்ளார்.இந்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் கட்டாருக்கு பணப்பரிமாற்றம் செய்தது எவ்வாறு என்பது குறித்து தொடர்ந்து விசாரணை இடம்பெறவுள்ளது.

இதன்படி நவாஸ் ஷரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டை கூட்டு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும், புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு நவாஸ் ஷரீப் மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.மேலும் 60 நாட்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவிருக்கும் நிலையில் நவாஸ் ஷரீபுக்கு இந்த வழக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதேநேரம் உச்ச நீதிமன்ற உத்தரவால் தற்போதைக்கு நவாஸின் பிரதமர் பதவிக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.

பனாமாவை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனமான மொசக் பொன்செகாவின் 11 மில்லியன் ரகசிய ஆவணங்கள் கசிந்ததே பாமா ஆவணம் என்று அழைக்கப்படுகிறது. இதில் அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள், உலகெங்கும் உள்ள செல்வந்தர்கள் கடல்கடந்த வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட விபரம் அம்பலமானது.

கடல்கடந்த நிறுவனங்கள் மூலம் சொத்துகளின் உண்மையான உரிமையாளர்கள் மறைக்கப்பட்டு வரி செலுத்துவதை தவிர்க்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவே குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Related posts: