அல் கொய்தாவுக்குப் பின்னடைவு: 40 தீவிரவாதிகள் பலி!

Tuesday, August 16th, 2016

அரேபியக் கூட்டணியால் ஆதரவளிக்கப்படும் யேமனிய இராணுவப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட நகர்வொன்றில், அல் கொய்தா ஆயுதக்குழுவைச் சேர்ந்த 40 பேரளவில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

கிழக்கு யேமனிலுள்ள அல் கொய்தாவின் தளங்களை நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலேயே, அல் கொய்தாவுக்கு இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதி அப்ட்றப்பு மன்சூர் ஹாடிக்கும் ஈரானால் ஆதரவளிக்கப்படும் ஹூதிகளுக்குமிடையிலான சிவில் யுத்தத்தைப் பயன்படுத்திய அல் கொய்தா குழு, கிழக்கு யேமனிலுள்ள அரேபியக் கடற்கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றியிருந்தது.

அல் கொய்தாவின் “அரேபியக் குடாநாட்டிலுள்ள அல் கொய்தா” என்ற பிரிவே, இவ்வாறு அப்பகுதியைக் கட்டுப்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஹட்ராமௌட் மாகாணத்தின் ஸின்ஜிஜபார், ஜார் ஆகிய இரண்டு நகரங்களில் காணப்பட்ட இக்குழு மீது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அந்நகரங்கள் இரண்டையுமே, படையினர் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையில், அல் கொய்தா குழு சார்பாக 40 பேர் கொல்லப்பட, ஏனையோர் தப்பியோடியுள்ளதாக அறிவிக்கப்படுவதோடு, யேமனியப் படையினர் தரப்பில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த நடவடிக்கையின் போது, சுமார் 100,000 பேர் வசிக்கும் நகரான ஸின்ஜிபாரில், அல் கொய்தாவின் தற்கொலைக் குண்டுதாரியொருவர், காரொன்றில் வைத்துத் தன்னைத் தானே வெடிக்க வைத்த போதிலும், அவரைத் தவிர வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப்படுகிறது.

Related posts: