அலெப்போவில் மீண்டும் மோதல்: பொதுமக்கள் வெளியேறுவதில் சிக்கல்!

Thursday, December 15th, 2016

சிரியாவின் அலெப்போவில் கிளர்ச்சிப் படையினருக்கும் அரசதரப்புப் படையினருக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன.

இதனால், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் கிழக்குப் பகுதி கடந்த 5 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்தது.

அதனை மீட்க கடந்த ஒரு மாத காலமாக இராணும் அப்பகுதியை முற்றுகையிட்டிருந்தது.

இந்த நிலையில், அலெப்போவை முழுமையாக மீட்கும் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும் கிளர்ச்சியாளர்களின் கோட்டையாக இருந்த 90 சதவீத பகுதிகள் அரச கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் அறிவித்தனர்.

கிளர்ச்சியாளர்களிடம் எஞ்சியிருந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற கடந்த செவ்வாய்க்கிழமை அலெப்போ நகரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

எனினும், கிளர்ச்சியாளர்களும் பொதுமக்களும் வெளியேறுவதற்கு சிரிய அரசாங்கம் புதிய நிபந்தனைகளை விதித்ததால், அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் எழுந்தது.

இந்த நிலையில், கிளர்ச்சிக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரச படையினரும், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்களும் கடந்த புதன்கிழமை குண்டு வீசி தாக்குதல்கள் மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்களின் குண்டுவீச்சில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்ததாக சிரிய அரசாங்கம் தெரிவித்தது.

இந்நிலையில், அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பொதுமக்களும், கிளர்ச்சிப் படையினரும் பாதுகாப்பாக வெளியேற சிரிய இராணுவம் சம்மதம் தெரிவித்திருந்தும், கடைசி நேரத்தில் அதற்கு சிரியா எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வெளியேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

aleppo

Related posts: