அமெரிக்க வர்த்தக உறவுகள் பாதிப்படையாது – சர்வதேச வர்த்தக செயலாளர்!

Thursday, July 27th, 2017

 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் அதே சமயம், அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள் பாதிப்படையாத வண்ணம் பிரித்தானியா செயலாற்றும் என சர்வதேச வர்த்தக செயலாளர் லியம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சியில் நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க வர்த்தக செயலாளர் ரொபர்ட்டுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு நாம் விலகுகின்றோம் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதே நேரம், சிறந்த நிலையில் இருக்கும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய உறவுகள் பிரெக்சிற்றின் பின்னரும் பாதுகாக்கப்படும்” என தெரிவித்தார்.

இருப்பினும் ஒன்றியத்தை விட்டு வெளியேறும் வரை பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட முடியாது என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறை ஆகும்.

அதனால், பிரெக்சிற்றின் பின்னர் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்களை தயார் செய்வது தொடர்பிலேயே கலந்தாலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரெக்சிற் மாற்றங்களை உள்வாங்கத் தேவையான காலம் குறித்த பிரசார நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts: