அமெரிக்கா போர் பயிற்சியை நிறுத்தினால் ஏவுகணைப் பரிசோதனைகளை நிறுத்தத் தயார் – வடகொரியா

கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா நடத்தி வரும் போர்ப் பயிற்சிகளை நிறுத்தினால், தங்களது ஏவுகணைப் பரிசோதனைகளை நிறுத்தத் தயார் என்று வட கொரியா கூறிய யோசனையை அமெரிக்கா நிராகரித்தது.அமெரிக்க ராணுவமும் தென் கொரிய ராணுவமும் இணைந்து ஆண்டுதோறும் போர்ப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதில் தரைப் படை, கடற்படை, விமானப் படை ஆகிய மூன்று பிரிவுகளுமே பங்கேற்கின்றன.இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் வட கொரியா அணுகுண்டு பரிசோதனையில் ஈடுபட்டது.இதையடுத்து, அந்த நாடு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்தது.ஆயினும் அதனைப் பொருட்படுத்தாமல், மேலும் பல்வேறு திறன் கொண்ட ஏவுகணைகளை விண்ணில் ஏவிப் பரிசோதனை செய்தது வட கொரியா. கடைசியாக, நீர்மூழ்கியிலிருந்து ஏவுகணை செலுத்தும் பரிசோதனையை கடந்த சனிக்கிழமை மேற்கொண்டது.இந்தப் பரிசோதனை மகத்தான வெற்றியடைந்ததாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் அறிவித்தார்.நீர்மூழ்கி மூலமாக எதிரி நாடுகளை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் திறனை தாங்கள் பெற்றுவிட்டதாக அவர் கூறினார்.
வட கொரியாவின் இந்த நடவடிக்கை அந்தப் பிராந்தியத்தில் ஏற்கெனவே உள்ள பதற்ற நிலையை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இதனிடையே, அணு ஆயுதம் உள்ளிட்ட போர்ப் பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்தினால், வட கொரியா தனது ஏவுகணைப் பரிசோதனைகளை நிறுத்திக் கொள்ளத் தயார் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ரீஸþ யோங் ஞாயிற்றுக்கிழமை கூறினார். அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.ஆனால் இந்த யோசனையை அமெரிக்கா நிராகரித்தது.
ஜெர்மனியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இது தொடர்பாக ஹானோவரில் திங்கள்கிழமை கூறியதாவது: அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் போர்ப் பயிற்சியை நிறுத்திக் கொண்டால், வட கொரியா தனது ஆயுதப் பரிசோதனைகளை நிறுத்திக் கொள்ளும் என்று கூறியிருப்பது ஏற்க முடியாத வாதம்.
அமெரிக்க நட்பு நாடுகள் தங்களின் போர்ப் பயிற்சிகளை நிறுத்தினாலும், வட கொரியா தனது வாக்குறுதியை மீறாது என்பது என்ன நிச்சயம்?வட கொரியா தனது அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிட வேண்டும். அந்தப் பிராந்தியத்தை அணு ஆயுதமில்லாப் பிராந்தியமாகத் திகழச் செய்ய அந்த நாடு வழி வகுக்க வேண்டும். இதை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
வட கொரியா அப்படியொரு முயற்சியை மேற்கொள்ளுமானால், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்ற நிலையைத் தணிக்கவும் எங்களுடயை நட்பு நாடுகளுக்குப் பாதுகாப்பு அளித்து வரும் முறையை மறுபரிசீலனை செய்யவும் உருப்படியான பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வருவோம். ஆனால் பதற்றத்தைத் தூண்டும் விதத்தில் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு வெளியிடப்படும் செய்தி அறிக்கையின் அடிப்படையில் அமைதிப் பேச்சில் ஈடுபட முடியாது. தங்களின் நோக்கத்தில் நேர்மையாக இருப்பதை வட கொரியா உறுதி செய்ய வேண்டும். அது வரையில், அமெரிக்க மக்களின் பாதுகாப்பையும், தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட எங்களது நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக நாங்கள் போர்ப் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ந்து செய்வோம் என்றார் ஒபாமா.
நீர்மூழ்கி ஏவுதளத்திலிருந்து ஏவுகணையை செலுத்தும் சோதனையின் முழு வெற்றி குறித்து சர்வதேச நாடுகள் சந்தேகம் எழுப்பியுள்ளபோதிலும், வட கொரியா அத்தகைய திறனை மேம்படுத்தும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளன. நீர்மூழ்கியிலிருந்து செலுத்தும் ஏவுகணை தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் என்று பிரிட்டன் உள்ளிட்ட அமெரிக்க நேச நாடுகள் கருத்து வெளியிட்டன.
Related posts:
|
|