அமெரிக்காவும் மெக்சிக்கோவும் இடையே குடியேறிகள் தொடர்பாக இணக்கப்பாடு!

Sunday, June 9th, 2019

அமெரிக்காவும் மெக்சிக்கோவும் அகதிகள் தொடர்பாக இணக்கப்பாடொன்றிற்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டை அடுத்து, மெக்சிக்கோவிற்கு எதிராக நாளை மறுதினம் அமெரிக்கா கொண்டு வரவிருந்த பொருளாதார தடை காலவரை இன்றி பிற்போடப்பட்டுள்ளது.

மெக்சிக்கோவின் தென்பகுதி எல்லையூடாக அமெரிக்காவினுள் நுழையும் சட்ட விரோத அகதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மெக்சிக்கோ உறுதியளித்துள்ளது

மூன்று நாட்களாக இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளை அடுத்தே இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஆயிரக்கணக்கான மெக்சிக்கோ மக்கள் எல்லை தாண்டி அமெரிக்காவினுள் நுழைந்துள்ளனர்.

அமெரிக்க – மெக்சிக்கோ ஒப்பந்தம் கைச்சாத்தானதும், இந்த நிலை முற்றாக மாறும் என நம்பப்படுகின்றது. முன்னதாக மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யும் சகல பொருட்களுக்குமான வரியை 25 சத வீதம் வரை அதிகரிக்க டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.

இப்படியான வரி மெக்சிக்கோவிற்கு எதிராக விதிக்கப்படும் பட்சத்தில், மெக்சிக்கோவின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: