அணு ஆயுத சோதனை வெற்றி: வடகொரியா தெரிவிப்பு!

Friday, September 9th, 2016

வடகொரியா, தனது ஐந்தாவது, மிகப்பெரிய அணு அயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அணு அயுத சோதனை நடத்திய இடத்தில் 5.3 புள்ளிக் அளவுக்கு நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், இதற்கு முன்பு நடத்திய சோதனைகளைவிட இது இரண்டு மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கக் கூடும் என தென் கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதிதாக தயாரிக்கப்பட்ட அணு ஆயுதம் சோதித்துப் பார்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நடுத்தர ரக ஏவுகணையில் அணு ஆயுதத்தை செலுத்தும் திறனை அடைந்திருப்பதாகவும் வடகொரியா கூறுகிறது.

அதே நேரத்தில், வடகொரியா சோதித்தது ஹைட்ரஜன் குண்டா என்பது குறித்து தென்கொரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏனெனில், சாதாரண அணு ஆயுதங்களைவிட ஹைட்ரஜன் குண்டுகள் மிகவும் அதிகத் திறன் படைத்த வெடிசக்தி உடையது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வடகொரியாவின் இந்த நடவடிக்கை, தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நடவடிக்கை என்று தென் கொரிய அதிபர் பார்க் குயென்-ஹை கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, வடகொரியாவை, சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவதற்கே வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது நாட்டு அதிகாரிகளுடன் அவசர ஆலோசன நடத்திய தென்கொரிய அதிபர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதித்தார்.

வடகொரியாவின் ஒரே முக்கிய ராஜாங்க கூட்டாளியான சீனா, அணு ஆயுத சோதனையை தீவிரமாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. நிலைமையே மேலும் மோசமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என வடகொரியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தெரிவித்துள்ளார்.

வடகொரியாவுக்கு எதிரான நாடுகள், தற்போதைய நடவடிக்கைக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று தெரியாமல் தடுமாறுவதாக கொரியாவின் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

கடந்த ஜனவரியில் வடகொரியா நடத்திய நான்காவது அணு ஆயுத சோதனைக்குப் பிறகு அந்த நாட்டின் மீதான தடை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

160909060555_north_korea_nuclear_test__640x360_ap

Related posts: