6138.1 கோடி ரூபாய் கொடுத்து கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் !

ஒன் – லைன் மூலம் நடைபெற்ற ஏலத்தில் 6138.1 கோடி ரூபாய் கொடுத்து கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா பெற்றுள்ளது.
ஏப்ரல் மாதம் (2018) 1 ஆம் திகதியில் இருந்து 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ளுரில் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கான ( ஐ.சி.சி. போட்டிகளை தவிர்த்து) தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்யும் உரிமம் முதல் முறையாக ஒன் – லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 102 சர்வதேச போட்டிகள் (மூன்று வடிவிலான போட்டியையும் சேர்த்து) இந்தியாவில் நடக்க இருக்கிறது.
ஒன் – லைன் ஏலம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஸ்டார் குழுமம், சோனி மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிறுவனங்கள் மாறி மாறி தொகையை உயர்த்திய வண்ணம் இருந்தன. குறிப்பாக ஸ்டார் குழுமம், சோனிக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா 6138.1 கோடி ரூபாய்க்கு உரிமத்தை வாங்கியுள்ளது. ஒரு போட்டிக்கு சராசரியாக 60.1 கோடி ரூபாய் கொடுக்க இருக்கிறது.
இதற்கு முந்தைய 5 ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் நிறுவனம் ரூ.3,851 கோடிக்குத்தான் பெற்றிருந்தது. இந்த முறை அதைவிட சுமார் 2300 கோடி ரூபாய் இந்திய கிரிக்கெட் சபைக்குக் கிடைக்கப்போகிறது.
Related posts:
|
|