15 வயது சிறுமியிடம் தோல்வியடைந்த வீனஸ் வில்லியம்ஸ்!

Wednesday, July 3rd, 2019

இலண்டனில் தொடங்கிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், முன்னாள் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 15 வயது பள்ளிச் சிறுமியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் தொடங்கியுள்ளது. நேற்று நடந்த போட்டியில் 15 வயது சிறுமியான கோரி காஃப்பை, முன்னாள் சாம்பியனும், அமெரிக்க வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்ஸ் எதிர்கொண்டார்.

சாம்பியனை எப்படி இந்த சிறுமி தாக்குப்பிடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் நினைத்தனர். ஆனால், அனைத்தும் தலைகீழாக நடந்தது. அவர் வீனஸ் வில்லியம்ஸின் பல சர்வீஸ்களை பிரேக் செய்தார்.

இதனால் வீனஸ் வில்லியம்ஸ் திணறினார். இவ்வாறாக முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் காஃப் கைப்பற்றினார். அதன் பின்னர் 2வது செட்டிலும் காஃபின் கை ஓங்கியிருந்தாலும் வீனஸ் வில்லியம்ஸ் போராடியதால், 4-4 என இருவரும் சமநிலை வகித்தனர்.

ஆனால், காஃபின் வேகத்துக்கு அவரால் ஈடுகொடுக்க முடியாததால் 6-4 என இரண்டாவது செட்டையும் இழந்தார். இதன்மூலம் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து விளையாடிய காஃப் 24 வயது சிறியவர் என்பதால் ரசிகர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வெற்றியின் மூலம் கோரி காஃப் தரவரிசையில் 310வது இடத்தில் இருந்து 215வது இடத்துக்கு முன்னேறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் வெற்றி பெற்ற பின் எனக்கு வில்லியம்ஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நானும் அவரின் விளையாட்டு நன்றி தெரிவித்தேன். இந்த வெற்றியை நினைத்து எவ்வாறு மகிழ்ச்சி அடைவது எனத் தெரியவில்லை. ஒரு போட்டியில் வென்ற பின், நான் அழுதது இதுதான் முதல் முறை. என்னுடைய உணர்ச்சிகளை எவ்வாறு வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை.

நான் வீனஸ் வில்லியம்ஸுக்கு எதிராக ஒவ்வொரு புள்ளியும் எடுக்கும்போது உற்சாகமாக இருந்தது. ஆனால், எனக்கு நானே என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். மகிழ்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டேன். வெற்றி பெற்ற பின் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’ என தெரிவித்தார்.

Related posts: