அபார வெற்றி பெற்ற ஹாமில்டன்!
Tuesday, October 1st, 2019
ரஷ்யாவில் நடந்த பார்முலா1 கார் பந்தயத்தில், இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹாமில்டன் முதலிடத்தை பிடித்தார்.
2019ஆம் ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16வது சுற்றான ரஷிய கிராண்ட்பிரி பந்தயம் சோச்சி ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
இதில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரரும், நடப்பு சாம்பியனுமான லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பிடித்தார். அவர் பந்தய தூரமான 309.745 கிலோ மீற்றர் இலக்கை, 1 மணி 33 நிமிடம் 38.99 வினாடிகளில் எட்டினார்.
இதன்மூலம் 26 புள்ளிகளை ஹாமில்டன் பெற்றார். இந்த சீசனில் அவர் பெறும் 9வது வெற்றி இதுவாகும். மொத்தம் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்ட இந்த பந்தயத்தில், பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 3.829 வினாடிகளில் இலக்கை எட்டி 2வது இடத்தை பிடித்தார். அவருக்கு 18 புள்ளிகள் கிடைத்தது.
பெராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க் (15 புள்ளிகள்) 3வது இடத்தைப் பிடித்தார். ஜேர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் உட்பட 5 வீரர்கள், விபத்து மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை நிறைவு செய்யாமல் வெளியேறினர்.
இதுவரை நடந்துள்ள 16 சுற்றுகள் முடிவில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் (322 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 17வது சுற்றுக்கான போட்டி வருகிற 13ஆம் திகதி ஜப்பானில் நடக்கிறது.
Related posts:
|
|
|


