ஹாங்காங், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி!

Saturday, March 10th, 2018

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று சிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் இருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெறும்.

நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) 150 ஓட்டங்கள் இலக்கை ஸ்காட்லாந்து அணி 41.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தலைவர் கைல் கொயட்ஸிர் 88 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்த ஸ்காட்லாந்து அணி சூப்பர்-6 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதே போல் ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பதிவு செய்தது.

‘பி’ பிரிவில் நடந்த இன்னொரு லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங்குடன் மோதியது. இதில் ஹாங்காங் நிர்ணயித்த 242 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 195 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. ஹாங்காங் அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும்.

அதே சமயம் ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக தழுவிய 3-வது தோல்வி இதுவாகும். ஏற்கனவே ஸ்காட்லாந்து, சிம்பாப்வே ஆகிய அணிகளிடமும் தோல்வி கண்டிருந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் அணிக்கு சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts: