ஹத்துருசிங்கவின் வகுக்கப்பட்டுள்ள வியூகம் இவைதான்!

Monday, December 25th, 2017

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்திக்க ஹத்துருசிங்க, இலங்கை அணியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக புதிய யுக்திகளையும், வியூகங்களையும் வகுத்துள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு ஆண்டில் ஏற்றுக்கொள்ள முடியாத தோல்விகளை இலங்கை  அணி கண்டுள்ளது. வீரர்கள் பிடிகளை தவறவிடுவது, அடிக்கடி உபாதையடைவது, வீரர்களை சரியாக இனம் காணாதது என்று பலவித நெருக்கடிகள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்குள் இருக்கிறது. இதனையெல்லாம் சமாளித்து விஸ்பரூபம் ஒன்றை எடுத்துள்ளார் ஹத்துரு சிங்கே, புதிய அணுகுமுறை, நெறிப்படுத்தல் என பல்வேறாக சொல்லலாம்.

ஆஸ்திரேலியாவின், பேர்த் நகரை சேர்ந்த ஒரு உளவியலாளர் மூலமாக வீரர்களுக்கு உளவியல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு விதமான 40 கேள்விகள் அடங்கிய வினாக்கொத்துக்கள் கொடுத்து அவர்களது விடைகளின் பிரகாரம் அவர்களை உளவியல் ரிதியாக நம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2019 உலக கிண்ண போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி 30 ஒருநாள் போட்டிகளிலும், 12 T20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட்டில்ஹத்துருசிங்க உருவாக்கிய சௌமியா சர்க்கார், சபீர் ரஹ்மான், முஸ்தபிசுர் ரஹ்மான் போன்ற நம்பிக்கை நட்சத்திர இளவயதினர் போன்று இலங்கையிலும் அடையாளம் காணும் முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளனர்.

முதற்கட்டமாக 22 வயதான ஷெஹான் மதுசங்க எனும்இளம் வீரர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் இந்த இளவயது வீரரை2019 உலக கிண்ணம் நோக்கி தயார்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய கிரிக்கெட்டில் அஸ்வின், ஜடேஜாவையே பின்தள்ளிவிட்டு இளம் வீரர்களான குல்தீப் யாதவ், சஹால் போன்ற மணிக்கட்டு(wrist spinners) சுழல் மன்னர்களை அடையாளம் காணவும் ஹத்துருசிங்க முயற்சிக்கவுள்ளார். அவரது பார்வையில் ஜெப்ரி வண்டெர்சி , சந்தகன், அமில அபோன்சோ ஆகியோர் இருப்பதாக அறிய வருகின்றது.

இளம் வீரர்களான குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்கிரம ஆகியோரோடு பங்களாதேஷ் அணியின் சாகிப் அல் ஹசன், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவின் ஹர்டிக் பாண்டியா போன்று ஒரு நேர்த்தியான சகலதுறை வீரரையும்(Genuine all-rounders) அவர் இணைப்பதில் குறியாக இருப்பதாகவும் அறிய வருகின்றது.

மத்தியூஸ் அடிக்கடி உபாதைக்குள்ளாவதால், அணித்தலைவர் திசார பெரேரா, அசேல, சசித் பத்திரன ஆகிய வீரர்களை அதற்க்கேற்ற விதத்தில் தயார் செய்வார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பங்களாதேஸ் சுற்றுப்பயணத்தின் போது பாரிய மாற்றங்களோடு மீள் எழுச்சி ஒன்றை நோக்கி இலங்கை அணி பயணிக்கவுள்ளது.

Related posts: