ஓய்வு பெற்றார் அன்ட்ரயா பியர்லோ!

Saturday, November 11th, 2017

மேஜர் லீக் கழகமான நியூயோர்க் சிற்றிக்கான தனது இறுதிப் போட்டியில் விளையாடியதைத் தொடர்ந்து, இத்தாலி தேசிய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் மத்தியகள வீரரான அன்ட்ரயா பியர்லோ, கால்பந்தாட்டத்திலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இத்தாலிய தேசிய கால்பந்தாட்ட அணிக்காக 116 போட்டிகளில் விளையாடிய, 38 வயதனா பியர்லோ, 2006ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை இத்தாலி வெல்வதற்கு உதவியிருந்தார்.

இத்தாலியின் பிறெஸியா கழகத்தில் தனது அறிமுகத்தை மேற்கொண்ட பியர்லோ, இன்டர் மிலன், ஏ.சி மிலன், ஜூவென்டஸ் ஆகிய இத்தாலியக் கழகங்களில் விளையாடிய பின்னர், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் நியூயோர்க் சிற்றியில் இணைந்திருந்தார்.

22 ஆண்டுகளாக விளையாடிய பியர்லோ, ஏ.சி மிலனுடன் இரண்டு சீரி ஏ பட்டங்களையும் இரண்டு சம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் ஒரு கழக உலகக் கிண்ணத்தையும் 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரையில் வென்றதுடன், 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நான்கு சீரி ஏ பட்டங்களை பியர்லோ வென்றிருந்தார்.

மொத்தமாக 872 போட்டிகளில் விளையாடிய பியர்லோ, இரண்டு கோப்பா இத்தாலியப் பட்டங்களையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: