கிளப் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்!

Monday, December 19th, 2016

கிளப் உலகக்கிண்ண தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிரடியால் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கிளப் அணிகளுக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் ஜப்பான் நாட்டில் நடைபெற்று வந்தது.இதில் நடந்த 2வது அரையிறுதிப்போட்டியில் கிளப் அமெரிக்கா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள யோகோஹாமாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட், ஜப்பானின் கஷிமா அன்ட்லெர்ஸ் அணியை எதிர்கொண்டது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி தொடக்கத்திலே அதிரடியை காட்டியது. கரிம் பென்சிமா அந்த அணிக்கு முதல் கோலை பதிவு செய்தார்.இதற்கு பதிலடியாக களமிறங்கிய கஷிமா அன்ட்லெர்ஸ் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த 2 கோலையும் ககு ஷபாசகி அடித்தார்.

கஷிமா அன்ட்லெர்ஸ் முன்னிலை பெற்றிருந்த போது ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து மிரள வைத்தார்.பெனால்டி வாய்ப்பு மூலம் முதல் கோலை அடித்த ரொனால்டோ, அதன்பின் கூடுதல் நேரத்தில் மேலும் இரண்டு கோல்கள் அடித்தார்.

கஷிமா அன்ட்லெர்ஸ் அணியால் மேலும் கோல் ஏதும் அடிக்க முடியாத நிலையில், ரியல் மாட்ரிட் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட்ஒட்டுமொத்தமாக ஐந்துமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: