வேகமாக ஆடுமாறு புஜாராவைக் கேட்டோம் – விராத் கோலி!

Wednesday, September 28th, 2016

இந்திய அணியின்3ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரரான செற்றேஸ்வர் புஜாராவை, வேகமாகத் துடுப்பெடுத்தாடுமாறு கோரியதாக, இந்திய டெஸ்ட் அணித் தலைவர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

நிதானமான துடுப்பாட்டத்துக்குப் பெயர் போன புஜாரா, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக அண்மையில் இடம்பெற்ற தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அவருக்குப் பதிலாக, றோகித் ஷர்மா சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கான்பூரில் நியூசிலாந்துக்கெதிராக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்துள்ள கோலி, “புஜாரா, அழுத்தங்களை நன்றாக உள்வாங்கக்கூடிய ஒருவர். ஆனால், ஒரு கட்டத்தின் பின்னர், அணிக்கு ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்படும். அங்கு தான், அதைப் பயன்படுத்தும் திறமை அவருக்கு உண்டு என நாம் உணர்ந்தோம்” என்றார்.

இந்தப் போட்டியில் அவர் வேகமாகத் துடுப்பெடுத்தாடியதைச் சுட்டிக்காட்டிய கோலி, அதைச் சிறப்பானது என்று அழைத்ததோடு, ஆரம்பத்தில் அவர் இவ்வாறு தான் துடுப்பெடுத்தாடியதாகத் தெரிவித்தார்.

இந்தப் போட்டிக்கு முன்னர் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த புஜாரா, 48.20 என்ற அடித்தாடும் வீதத்திலேயே (ஸ்ட்ரைக் ரேட்) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்தப் போட்டியில் அவர், 53.63 என்ற அடித்தாடும் வீதத்தில் ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்குப் பின்னர் இடம்பெற்ற துலீப் கிண்ணத் தொடரில், 280 பந்துகளில் 166 ஓட்டங்கள் (அ.வீ: 59.28), 35 பந்துகளில் 31 ஓட்டங்கள் (அ.வீ: 88.57), 363 பந்துகளில் 256 ஓட்டங்கள் (அ.வீ: 70.52) என, வேகமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தமை, கோலியினதும் பயிற்றுநர் அணில் கும்ப்பேளியினதும் கோரிக்கையின் பின்னர், வேகமாகத் துடுப்பெடுத்தாடுவதற்கு புஜாரா முயல்கின்றமையை எடுத்துக் காட்டுகிறது.

1459265763-7565

Related posts: