வெற்றிவாகை சூடியது யாழ். மத்திய கல்லூரி!

Friday, January 18th, 2019

யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை 2:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி. யாழ் மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடத்தும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரின் இறுதி ஆட்டம் மின்ஒளியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் சென்.பற்றி;க்ஸ் கல்லூரி அணியும் மோதின. ஆட்டம் ஆரம்பமாகி 15 ஆவது நிமிடத்திலேயே முதலாவது கோல் பதிவானது. சாந்தன் தனது அணிக்காக அதனைப் பெற்றுக்கொடுத்தார். முதல் பாதி ஆட்டம் நிறைவடையும்போது 1:0 என்ற கணக்கில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமானது. யாழ் மத்திய கல்லூரி அணிக்கு 16 ஆவது நிமிடத்தில் தண்டனை உதை கிடைத்தது. வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய மத்திய கல்லூரி அணி வீரர் றோம்சன் அதனைக் கோலாகப் பதிவு செய்தார். ஆட்டம் சமநிலை அடைந்தது. அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிப்பதற்கான வாய்ப்புக்களைத் தவறவிட்டனர்.

இருப்பினும் மத்திய கல்லூரி அணி 27 ஆவது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு வாய்ப்பை கோலாக மாற்றியது. விக்னேஸ் அதனைப் பதிவு செய்தார். 2:1 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை பெற்றது மத்திய கல்லூரி. ஆட்டம் நிறைவடைவதற்கு ஒரு நிமிடம் எஞ்சியிருந்த நிலையில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு தண்டனை உதை கிடைத்தது. அதனைக் கோலாக்குவதற்கு அந்த அணி தவறியது. ஆட்டநேர நிறைவில் 2:1 என்ற கோல் கணக்கில் மத்திய கல்லூரி அணி கிண்ணத்தை வெற்றி கொண்டது.

சிறந்த கோல் காப்பாளராக பற்றிக்ஸ் கல்லூரி வீரர் ஏ.பி.டிலக்சனும் தொடர் ஆட்ட நாயகனாக மத்திய கல்லூரி வீரர் டிலக்சனும் ஆட்டநாயகனாக மத்திய கல்லூரி வீரர் றோம்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related posts: