வீரர்களின் உபாதைகளைத் தடுக்க மெதுவான பந்துகள் வேண்டும் – ரபேல் நடால்!

Monday, October 17th, 2016

நவீன டென்னிஸ் போட்டிகள், மிகவும் வேகமானதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான ரபேல் நடால் டெனிஸ் போட்டிகளை மெதுவாகக் கொண்டுசெல்வதற்கு, குறைவாக மேலெழும் பந்துகளைப் பயன்படுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரையில் 14 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடால், அண்மைக்காலமாக உபாதைகளால் தடுமாறி வருகிறார். இதன் காரணமாக, தரப்படுத்தலில் 5ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, பந்துகள் பற்றிய அவரது கருத்து அமைந்துள்ளது.

“இன்று நாங்கள், அதிக பலத்துடன் விளையாடுகிறோம். கிட்டத்தட்ட எல்லா வீரர்களுமே, எந்த நிலையிலிருந்தும் கூட, வெற்றிக்கான புள்ளிகளைப் பெறக்கூடியதாக இருக்கும்” என்று, நடால் குறிப்பிட்டார்.

இவ்வாறு முன்னேறிவிட்ட டென்னிஸில், வேகமாக நகரும் பந்துகள், வீரர்களுக்குக் காயத்தை ஏற்படுத்துவதற்கான ஆபத்தைக் கொண்டிருப்பதாகக் கருதுவதாக, நடால் தெரிவிக்கிறார்.

“பந்துகள், மிகவும் வேகமாக நகர்கின்றன. பந்தொன்றைத் திருப்பி அடிக்க வேண்மாயின், அதியுயர் வேகத்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் திடீரென நிற்க வேண்டிய ஏற்படலாம் இல்லாவிடில் திடீரெனத் திசையை மாற்ற வேண்டியிருக்கலாம். இவ்வாறான நேரங்களில் தான், உங்களை நீங்கள் காயப்படுத்திக் கொள்ளலாம். இவை தான், எமக்குக் காயங்களை ஏற்படுத்துகின்றன” என்றார்.

இந்நிலைமையை மாற்றியமைப்பதற்காகவே, பந்துகளின் மேலெழும் அளவைக் குறைப்பதன் மூலமாக, பந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென, நடால் கோருகின்றார்.

இவ்வாண்டு ஏப்ரலில், பார்சிலோனாவில் இடம்பெற்ற தொடரைக் கைப்பற்றிய நடால், அதன் பின்னர், எந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கும் இதுவரை தகுதிபெற்றிருக்கவில்லை. நடப்பு பருவகாலத்திலும் சிறப்பான பெறுபேறுகளை இன்னமும் வெளிப்படுத்தாத நடால், இப்பருவகாலத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம் என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

rafael-nadal-71

Related posts: