வடமாகாண விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்குப் பெற்றோர்களின் பங்களிப்புத் தேவை உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய தலைவர் !

Wednesday, July 4th, 2018

வடக்கு மாகாண விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்குப் பெற்றோர்களின் பங்களிப்பே இன்றைய தேவை என வடக்கு மாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பொதுசன நூலக வாசகர் மாதாந்த உரை நிகழ்ச்சி அண்மையில் யாழ் பொதுநூலக குவிமாடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் வடக்கு மாகாண விளையாட்டுத்துறை வளர்ச்சி அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

தமிழன் தனித்து வாழ்வதைவிட தனித்துவமாக வாழ்வதே சிறந்தது. இதனைப் பாதுகாக்க வேண்டுமானால் எமது கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, விளையாட்டு என்பவற்றைப் பாதுகாப்பதுடன் அதன் வளர்ச்சியை இன்றைய சமூகத்தில் விதை;து உயர்ச்சி காணச் செய்ய வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை என்பது எழுச்சிகொண்டு காணப்படுகின்றபோதும் அன்றைய காலத்தைப் போல இன்று பரவலாக்கப்படவில்லை.

அன்றைய காலகட்டத்தில் விளையாட்டு எல்லோரிடத்திலும் பரவலாக்கப்பட்டிருந்தது. சமூக அமைப்பின் ஆரோக்கியமாகவும் ஆளுமைமிக்கவர்களாகவும் தொற்றா நோய்களில் இருந்து விடுபட்டவர்களாகவும் காணப்படும் தனித்துவம் மிக்கவர்களாகக் காணப்பட்டனர்.

ஆனால் இன்று தேசிய மட்ட சாதனைகள் ஒருபுறம் நிகழ்த்தப்படுகின்றபோதும் மறுபுறம் தொற்றாநோய்களுக்கு உட்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது இன்றைய காலகட்டத்தில் விளையாட்டு பரவலாக்கப்படவில்லை என்பதே கண்கூடு.

இதற்கான காரணம் அன்றைய கால பெற்றோர்கள் விளையாட்டுக்குத் தடையாக இருக்கவில்லை. இன்றைய கால பெற்றோர்கள் விளையாட்டில் ஆர்வம் அற்றவர்களாகவும் இதன் மூலம் நன்மை ஏதும் ஏற்படாது என்ற அறியாமையிலும் உள்ளமையே. ஆனால் பெற்றோர்கள் ஒன்றை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். பிள்ளைகளை விளையாட்டுச் செயற்பாட்டுக்கு அனுப்ப மறுப்பதனால் தொற்றாநோய்களுக்கு உட்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே கல்வியை சிறந்த முறையில் கற்க முடியும். அதுமட்டுமன்றி தனிநபர் சுகாதாரம், விளையாட்டிலும் தங்கியுள்ளது என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து விளையாட்டில் ஈடுபட தமது பிள்ளைகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றார்.

Related posts: