ரஹீமோடு முரண்படுகிறார் தமிம் இக்பால்!

Friday, October 28th, 2016

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், ஓரளவு போட்டித்தன்மையை வெளிப்படுத்திய போதிலும், பங்களாதேஷ் அணி, அப்போட்டியில் தோல்வியடைந்த நிலையில், அப்போட்டியிலிருந்து பெறப்படக்கூடிய முடிவு என்னவென்பது குறித்து, அவ்வணியின் தலைவர் முஷ்பிக்கூர் ரஹீமோடு, அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால், முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

22 ஓட்டங்களால் தோல்வியடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்த ரஹீம், அப்போட்டியில் பங்களாதேஷ் அணி போட்டித்தன்மையுடன் விளையாடியதை முன்னிறுத்தியதோடு, தங்களால் முடிந்ததை, தாங்கள் செய்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்தோடு, அப்போட்டியில் வென்றதும் மாத்திரம், பங்களாதேஷ் அணி மிகப்பெரிய அணியாக வந்திருக்காது எனவும் தெரிவித்து, அதை “கற்கும் அனுபவம்” என வர்ணித்திருந்தார்.

எனினும், தற்போது கருத்துத் தெரிவித்துள்ள தமிம் இக்பால், “நாங்கள் சிறப்பாக விளையாடியதாக அனைவரும் தெரிவிக்கிறார்கள். ஆனால், இவ்வளவு சிறிய விடயங்கள் குறித்து மகிழ்ச்சிப்பட முடியாது என, நாங்கள் அணியாகக் கலந்தரையாடியுள்ளோம். அந்த மனநிலை இருக்குமாயின், எங்களால் முன்னேற முடியாது. நாங்கள் போட்டியிட்டோம், ஆனால் அந்தப் போட்டியை நாங்கள் வென்றிருக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த போட்டியைப் பற்றி நாங்கள் குறைவாகக் கதைப்பது, சிறப்பானது. அதுவொரு சிறந்த டெஸ்ட் போட்டி. ஆனால், இறுதியில் நாங்கள் தோற்றுவிட்டோம். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தப் போட்டி, தோல்வியடைந்த போட்டி எனவே குறிப்பிடப்படும்” என்று தெரிவித்தார்.

அணியின் முன்னணி வீரரான தமிம் இக்பால், அணித்தலைவர் ரஹீம் தெரிவித்த கருத்துகளுக்கு, முற்றிலும் மாறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளமை, இங்கு அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது.
பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டாக்காவில் நாளை ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பிக்கவுள்ளது.

article_1477578292-InTamim

Related posts: