ரஷ்யக் குழப்பங்கள் அமெரிக்காவைப் பாதிக்கும்?

Wednesday, August 24th, 2016

2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான உரிமையைப் பெறுவதற்கு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரம் முயல்கின்ற நிலையில், இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர், ரஷ்யாவின் ஊக்கமருந்து தொடர்பாக எழுந்த சர்ச்சைகள், அந்நகரத்துக்கு எதிராகச் செல்லுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நகரத்தைத் தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு, அடுத்தாண்டு செப்டெம்பரில் இடம்பெறவுள்ளது. இதில் லொஸ் ஏஞ்சலஸ் தவிர, பிரான்ஸின் பரிஸ், இத்தாலியின் றோம், ஹங்கேரியின் புடாபெஸ் ஆகிய நகரங்கள் போட்டியிடவுள்ளன.

இந்தத் தெரிவு, சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வாக்குகளாலேயே மேற்கொள்ளப்படும் நிலையில், அச்செயற்குழுவுக்குள் அமெரிக்காவுக்கெதிரான மனோநிலை ஒன்று  காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் இடம்பெற்றுவந்த அரச ஆதரவுடனுடனான ஊக்கமருந்துப் பாவனை வெளியான விடயத்தில், அமெரிக்காவின் தலையீடு தொடர்பாக சில நாடுகள் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவல்லாத மூன்று நாடுகள், இது தொடர்பாக தெரிவிக்கையில், ரஷ்யா தொடர்பான இந்தக் குழப்பம், றியோ ஒலிம்பிக் ஆரம்பிப்பதற்கு முன்பாக குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவின் நற்பெயரைப் பாதித்துவிட்டதாகவும் தெரிவித்தன. இன்னுமொரு நாடு, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் தொடர்பான விசாரணைகளையும் உதாரணமாகக் காட்டியது.

98 நாடுகள் அங்கம் வகிக்கும் இச்செயற்குழுவில், எத்தனை நாடுகள், இவ்வாறான எண்ணத்தைக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரியாத போதிலும், தனது பெயரைக் காப்பாற்றுவதற்கு லொஸ் ஏஞ்சலஸ் முயலாவிட்டால், அடுத்தாண்டில் அது பாதிப்பைச் சந்திக்குமென்றே கருதப்படுகிறது.

Related posts: