மொஹமட் ஷெஹ்சாத்துக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை!

Tuesday, August 20th, 2019

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினுடைய நடத்தை விதிமுறைகளை ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரரான மொஹமட் ஷெஹ்சாத் மீறியுள்ளார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு 1 வருடம் அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டிலிருந்தும் விளையாடுவதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நிறைவுக்கு வந்த உலகக்கிண்ண தொடரிலிருந்து உபாதை காரணமாக இடைநடுவில் வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரரான மொஹமட் ஷெஹ்சாத் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் முரண்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் அதிகமாக உபாதை பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுவரும் வீரர்களில் இவரும் ஒருவராக காணப்பட்டார். மேலும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் போட்டியின் போது ஊக்கமருந்து பாவித்தார் என்ற காரணத்தினால் சில காலம் தடைக்கும் உள்ளானார்.

மொஹமட் ஷெஹ்சாத் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளதாவது,

“ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினுடைய ஒழுங்கு விதிமுறைகளையும், ஒரு வீரர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும் மொஹமட் ஷெஹ்சாத் மீறியுள்ளார்.”

”ஒரு வீரர் நாட்டை விட்டு வெளியாகுவதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினுடைய அனுமதியை பெற வேண்டும் என்ற விடயத்தை மீறி அவர் பல முறைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் அவர் பயிற்சி என்ற நோக்கத்துக்காக வெளிநாடு சென்றிருந்தால் அவ்வாறு செல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையானது வீரர்களுக்கு தேவையான அனைத்து பயிற்சி வசதிகளையும் சொந்த நாட்டிலேயே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: