மாற்றுக் கருத்துக்களை வழங்கியுள்ளதாக சனத் மீது குற்றச்சாட்டு!

Saturday, March 2nd, 2019

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரரும் தெரிவுக்குழு தலைவருமான சனத் ஜயசூரிய, ஊழல் ஒழிப்பு பிரிவிடம் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.

சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கட் தடை குறித்த விசாரணை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி சனத் ஜயசூரியவை சந்தித்த சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள், அந்த வருடத்தின் ஆரம்பம் முதல் பயன்படுத்திய கையடக்க தொலைபேசியின் தரவுகளை விசாரணைக்காக கோரியிருந்தனர்.

இதற்கு பதில் வழங்கியுள்ள சனத் ஜயசூரிய, தாம் இரண்டு கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் மீண்டும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவில் முன்னிலையான அவர், தாம் பயன்படுத்திய மேலும் இரண்டு கையடக்க தொலைபேசிகள் காணாமல் போனதாக தகவல் வழங்கியிருந்தார்.

குறித்த தொலைபேசி தயாரிப்பு நிறுவனத்தால் கூட தேடிக் கொள்ள முடியாத அந்த தொலைபேசி மற்றும் சிம் அட்டையை மீண்டும் பயன்படுத்தவில்லை என சனத் ஜயசூரிய குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், காணாமல் போனதாக சனத் ஜயசூரிய கூறும் சிம் அட்டை ஊடாக நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை அந்த சிம் அட்டைக்கான கட்டண பட்டியல் ஊடாக அறிந்து கொண்டதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த தகவல் வெளியீட்டின் பின்னர் மீண்டும் இரண்டு வாரங்களில் சட்டத்தரணி ஊடாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு பிரிவு அதிகாரிகளை சந்தித்த சனத் ஜயசூரிய, தமது கையடக்க தொலைபேசி தொலைந்து போகவில்லை என குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி ஊடகவியலாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த கையடக்க தொலைபேசியை நிலத்தில் எறிந்ததாக அவர் தெரிவித்தார்.

அதன்பின்னர், அந்த கையடக்க தொலைபேசியில் இருந்த சிம் அட்டையை பயன்படுத்தவில்லை என 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சனத் ஜயசூரிய குறிப்பிட்டிருந்தாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த தகவல் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவிக்கும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் அறிக்கைக்கு அமைய, மே மாதம் 24ஆம் திகதியின் பின்னர் குறித்த சிம் அட்டை தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதற்கும், குறுந்தகவல்களை அனுப்புவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கைத்தொலைபேசியை பயன்படுத்தவில்லை என சனத் ஜயசூரிய தெரிவித்த காலப்பகுதியில், ”தம்மைத் தொடர்புகொள்வாதற்காக குறித்த தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தவும்” எனத் தகவல் வழங்கப்பட்ட வட்ஸ்அப் தகவலொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் மற்றும் தொலைபேசி தகவல்களை வழங்கத் தவறியமை முதலான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சனத் ஜயசூரியவுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவை, குறித்த தகவல்களை பரிசீலிப்பதற்காக முயற்சித்த காலப்பகுதிக்குள் சனத் ஜயசூரிய, தெரிவுக்குழுவின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.

குறித்த காலத்தில், இலங்கை அணி, சிம்பாப்வே அணியுடன் இலங்கையில் வைத்து இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரில் தோல்வியடைந்தது.

இதேநேரம், குறித்த காலப்பகுதியில் இந்தியாவுடன் இடம்பெற்ற போட்டிகளில், பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சாமர கப்புகெதர, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றபோது, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் மேற்கொண்டமை பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்தது.

குறித்த போட்டிக்கு முன்னதாக இடம்பெற்ற குழுக் கூட்டத்தின்போது, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றால், முதலில் களத்தடுப்பில் ஈடுபட இலங்கை தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: