தொடரை வென்றது இங்கிலாந்து!

Monday, October 22nd, 2018

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், டக்-வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி, இலங்கை அணியில் டிக்வெல்லா மற்றும் சமரவிக்ரமா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வோக்ஸின் பந்துவீச்சில் சமரவிக்ரமா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அணித்தலைவர் தினேஷ் சண்டிமல் 33 ஓட்டங்கள் எடுத்தார்.

அதன் பின்னர், அரைசதம் அடித்த டிக்வெல்லா 70 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்து மொயீன் அலி பந்துவீச்சில் அவுட் ஆனார்.

எனினும், ஷனகா மற்றும் திசாரா பெரேரா இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் அரைசதம் கடந்த ஷனகா 66 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களும், பெரேரா 44 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அகிலா தனஞ்ஜெயா 32 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ஓட்டங்கள் எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 2 விக்கெட்டுகளும், டாம் குரான், வோக்ஸ் மற்றும் ரஷீத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 45 ஓட்டங்களும், ஹால்ஸ் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஜோ ரூட் 32 ஓட்டங்களிலும், இயான் மோர்கன் 31 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தபோது மழை குறுக்கிட்டது.

அப்போது, இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 23ஆம் திகதி கொழும்புவில் நடைபெற உள்ளது.

Related posts: