பெண்கள் கிரிக்கெட் அணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது-மிதாலிராஜ்!

Friday, July 28th, 2017

பெண்கள் கிரிக்கெட் அணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவி மிதாலிராஜ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டாம் இடம்பெற்ற இந்திய அணி நேற்று நாடு திரும்பியது. இதன்பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“பெண்கள் கிரிக்கெட் அணிக்கு மக்கள் மத்தியில் எப்பொழுதும் இல்லாத வகையில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இது பெண்கள் கிரிக்கெட்டுக்கு நல்ல ஆரம்பமாக கருதுகிறேன். பெண்களுக்கு ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டு இருந்தால் இந்த திட்டத்துக்கு நானே ஆதரவு தெரிவித்து இருக்கமாட்டேன். ஆனால் தற்போது நடந்த உலகக் கிண்ண தொடரில் பெண்கள் கிரிக்கெட்டின் தரம் வெகுவாக முன்னேறி இருப்பதுடன், திறமை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது.

பெண்கள் ஐ.பி.எல். போட்டி கொண்டு வர வேண்டும் என்றால் போட்டியின் பொதுவான தரம் நன்றாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். உலகக் கிண்ண தொடரின் புள்ளி விபரங்களை பார்த்தால் எங்களது தரம் உயர்ந்து இருப்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். இந்த உலகக்கிண்ண தொடரில் 300 ஓட்டங்களுக்கு மேல் எளிதாக குவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு அணியிலும் சதம் அடிக்கும் வீராங்கனைகளும், 5 விக்கெட்டுகள் வீழ்த்தக்கூடிய திறன் படைத்த வீராங்கனைகளும் இருப்பதை பார்க்க முடிந்தது. அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடியதன் மூலம் சில வீராங்கனைகள் தங்களது விளையாட்டு திறனை உயர்த்தி இருப்பதுடன் தேசிய அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

ஐ.பி.எல். போட்டி உள்ளூர் வீராங்கனைகளின் தரத்தை உயர்த்த உதவிகரமாக இருக்கும். ஐ.பி.எல். போட்டியை நடத்துவது என்பது இந்திய கிரிக்கெட் சபையின் முடிவை பொறுத்ததாகும். இது போன்ற லீக் போட்டிகள் வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்த வழிவகுக்கும். மேலும் வெளிநாட்டு வீராங்கனைகளுடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைப்பது நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்பது எனது எண்ணமாகும். இந்திய பெண்கள் அணி மக்கள் மனதை அதிகம் கவர்ந்து இருப்பது பெருமை அளிக்கிறது. தற்போது பெண்கள் கிரிக்கெட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதுபோல் இன்னும் நிறைய போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்தால் மேலும் அதிக கவனத்தை ஈர்க்க முடியும்’ என கூறினார்.பெண்கள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிபோட்டியில், இங்கிலாந்து அணியிடம் 9 ஒட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: