பரபரப்பாகும் ஐபிஎல் களம் – ப்ளேஓப் வாய்ப்புக்காக முட்டி மோதும் அணிகள்!

Wednesday, May 15th, 2024

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளேஓப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தெரிவாகியுள்ளது.

டெல்லி அணியுடனான நேற்றையப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வி அடைந்ததை அடுத்து ராஜஸ்தான் அணிக்கு ப்ளேஓப் சுற்றுக்கு 16 புள்ளிகளுடன் முன்னேறியுள்ளது.

நேற்றையப் போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால் அந்த அணியின் நிகர ஓட்ட மதிப்பு மறை பெறுமானத்தில் இருப்பதால் ப்ளேஓப் வாய்ப்பு மங்கிவிட்டது.

இதனால் ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்வதற்கான போட்டி மூன்று அணிகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ளது.

இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் ப்ளேஓப் வாய்ப்புக்காக போட்டியிடுகின்றன.

சென்னை அணி பெங்களூர் அணியை வீழ்த்தி 16 புள்ளிகள் பெற்று, அதேநேரத்தில் சன்ரைசர்ஸ் அணி எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் பெரிய இடைவெளியில் தோற்று நிகர ஓட்ட வீதம் மிகவும் குறைந்தால் டெல்லி அணி ப்ளேஓப் சுற்றுக்கு தகுதி பெறலாம்.

இதற்கு சன்ரைசர்ஸ் அணி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவ வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

லக்னோ அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. அந்தப் போட்டியில் 200 ஓட்டங்கள் குவித்து எதிரணியை 100 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினாலும் அந்த அணியின் நிகர ஓட்ட வீதம் மறை பெறுமானத்தில் தான் இருக்கும்.

ஆகையினால் லக்னோ அணியின் ப்ளேஓப் வாய்ப்பும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே கூறலாம்.

இதனிடையே, சென்னை அணியை கடந்து புள்ளிப்பட்டியலில் முன்னேற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 200 ஓட்டங்களை குவித்து 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற வேண்டும்.

அதேநேரம் 200 ஓட்டங்களை துரத்தியடிக்க நேரிட்டால் 18.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தால் பெங்களூரு அணி ப்ளேஓப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

சன்ரைசர்ஸ் எஞ்சியிருக்கும் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்தால் தான் 14 புள்ளிகளுடன் இருக்கும். அப்போதும் ப்ளேஓப் சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேற முடியும்.

சென்னை அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ பெங்களூரு அணி லீக் சுற்றுடன் வெளியேறிவிடும்.

சென்னை அணியை பொறுத்தவரை பெங்களூரு அணியை வீழ்த்தினால் ப்ளேஓப் உறுதியாகிவிடும். அல்லது 200 ஓட்ட இலக்கிற்கு எதிராக சென்னை அணி 18 ஓட்டங்களுக்கும் குறைவான இடைவெளியில் தோற்க வேண்டும்.

அப்படி நடந்தால் பெங்களூரு அணியின் நிகர ஓட்டத்தை விட சென்னை அணியின் நிகர ஓட்டம் நல்ல நிலையில் இருக்கும்.

ஒருவேளை சென்னை அணி படுதோல்வி கண்டு விட்டால் சன்ரைசர்ஸ் அணி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால் மட்டுமே ப்ளேஓப் சுற்றுக்கு செல்ல முடியும்.

சன்ரைசர்ஸ் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டு சென்னை அணியின் நிகர ஓட்டத்திற்கு கீழ் இறங்கினால் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளில் ப்ளேஓப் சுற்றுக்கு தகுதி பெறும்.

எனினும், சன்ரைசர்ஸ் அணிக்கு ஒரே ஒரு புள்ளி கிடைத்தால் போதும் ப்ளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

000]]

Related posts: