உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகுவேன்! – மலிங்கா

Wednesday, March 16th, 2016

இலங்கை அணியின் புதிய தெரிவுக் குழுவை அந்த அணியின் முன்னாள் தலைவரான லசித் மாலிங்க கடுமையாக தாக்கியுள்ளார்.

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த நிலையில், தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து இலங்கை டி20 அணிக்கு புதிய தலைவராக மேத்யூஸ் நியமிக்கப்பட்டதோடு அந்த அணியில் மலிங்காவும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் மலிங்கா நேற்று முன் தினம் மலிங்கா இந்தியாவுக்கு கிளம்பிச் சென்றார்.

அப்போது கொல்கத்தா விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய மலிங்கா, அரவிந்த டி சில்வாவை தலைவராகவும் சங்கக்காரா மற்றும் களுவித்தாரன உள்ளிட்டவர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட புதிய தெரிவுக் குழுவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “எனக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் நான் என்னை உலகக்கிண்ண அணியில் தெரிவு செய்ய வேண்டாம் என்று தெரிவுக்குழுவிடம் தெரிவித்திருந்தேன்.

இதனை நான் ஆசியக்கிண்ணத் தொடருக்கு முன்னதாகவே அறிவித்திருந்தேன். எனது உடல் நிலையில் 70 வீதம் கூட முன்னேற்றம் இல்லை. ஆனால் என்னைத் தெரிவு செய்தார்கள்.

என்னை விளையாடுமாறு வற்புறுத்தினார்கள். என்னால் விளையாட முடியாது என்ற நிலையில் அதை புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு பதிலாக இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

எனது காலில் ஏற்பட்டுள்ள காயம் உடனடியாக குணமாகாது. அதற்கு எப்படியும் நீண்டகாலம் எடுக்கும்.

எனினும் எனது உடல் நிலையில் முன்னேற்றமடைந்தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்குவேன்.

அதேசமயம் களப்பயிற்சியில் ஈடுபடும் போது உடல்நிலை மோசமாக இருந்தால் உடனடியாக இந்த தொடரில் இருந்து என்னை விலக்குமாறும் இளம் வீரர் ஒருவருக்கும் வாய்ப்பு வழங்குமாறும் தெரிவுக்குழுவிடம் கோரிக்கை விடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

Related posts: