பயிற்சிப் போட்டியில் மண் கவ்விய இலங்கை!

Thursday, July 21st, 2016

இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 162 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் யூலை 26 திகதி நடக்கிறது. முன்னதாக அவுஸ்திரேலிய அணி இலங்கை லெவன் அணியுடன் 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் பங்கேற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை லெவன் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன் படி, முதல் இன்னிங்சில் அந்த அணி 229 ஓட்டங்களை குவித்தது.அணித்தலைவர் சிறிவர்த்தனே (53), குணரத்னே (58) ஆகியோர் அரைசதம் விளாசினர். டி சில்வா 49 ஓட்டங்கள் எடுத்தார்.

அதே சமயம் அவுஸ்திரேலிய அணி சார்பில், சுழல் வீரர் ஸ்டீவ் ஓ’கீபே 5 விக்கெட்டுகளை எடுத்தார்.பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடியது.

ஜோ பர்ன்ஸ் (72), அணித்தலைவர் சுமித் (57), ஸ்டீவ் ஓ’கீபே (62) ஆகியோர் அரைசதம் அடித்தனர். தவிர, ஷான் மார்ஷ் (47), ஆடம் வோக்ஸ் (43), மிட்செல் ஸ்டார்க் (45) ஆகியோரும் சிறப்பாக ஆடினர்.அந்த அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 431 ஓட்டங்களை எடுத்து இலங்கை லெவன் அணியை விட 202 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் கடைசி நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்சில் 474 ஓட்டங்கள் பெற்றது.

இலங்கை லெவன் அணி சார்பில் ஷெகன் ஜெயசூரியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை லெவன் அணி ஸ்டீவ் ஓ’கீபே சுழலில் சிக்கியது. இதனால் 20.5 ஓவரிலே அந்த அணி 83 ஓட்டங்களுக்கு சுருண்டது.அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு வெளியேறினர். இதனால் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 162 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்டீவ் ஓ’கீபே 21 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இந்தப் போட்டியில் அவர் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related posts: