பத்து முரளிகள் பந்துவீசினாலும் அவுஸ்திரேலியாவை வீழ்த்துவோம்!

Tuesday, July 26th, 2016

பத்து முத்தையா முரளிதரன்கள் வந்து பந்து வீசினாலும் அதற்கு தாக்கு பிடிக்க கூடியவாறு இலங்கை அணியை தயார் செய்வோம் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சியளிக்க ஒப்பந்தமாகியுள்ள முரளிதரன் தொடர்பாக நேற்று (24) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முரளிதரன் அவுஸ்திரேலியா அணிக்கு பயிற்சி அளிப்பது அவரது தொழில் ரீதியாக சரியானதாகவே காணப்படுகின்றது.எனினும் சொந்த நாட்டிற்கு எதிராக தனது மண்ணில், அதுவும் அவரது சொந்த இடமான கண்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு சுழல் பந்து பயிற்சி அளிப்பதானது எமது இதயம் உடைவது போல் இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முரளிதரன் தொடர்பாக இரண்டு முறைப்பாடுகள் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.இலங்கை அணியின் முகாமையாளர் சரித் சேனாநாயக்கவை திட்டியமைக்காக முரளிதரனுக்கு எதிராக முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை அனுமதியில்லாமல் பல்லேகலை மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டது தொடர்பில் முறைப்பாடடொன்று கிடைத்துள்ளதோடு, அதனை அவுஸ்திரேலியா கிரிக்கட் சபைக்கு அறிவித்துள்ளதாகவும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டியில் பத்து முரளிகள் கொண்டு பந்து வீசினாலும் அவுஸ்திரேலியாவை இலங்கை அணி வீழ்த்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று ஆரம்பமாகியுள்ள இலங்கை அவுஸ்திரேலிய போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 117 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related posts: