நெய்மருக்கு செலவழித்த பணத்தை ரீ-சேட்டை விற்பனை செய்து சம்பாதிக்கும் பி.எஸ்.ஜி. அணி!

Monday, August 7th, 2017

கால்பந்து கழக அணியான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரேஸில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான ஜே.ஆர் நெய்மரின் ரீ-சேட்டை விற்பனை செய்தே நெய்மரை வாங்குவதற்கு செலவழித்த இடமாற்ற தொகையை சம்பாதிக்கும் முயற்சியில் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி நிர்வாகம் களமிறங்கியுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடிவந்த நெய்மரை, பார்சிலோனா அணியிடமிருந்து உலகசாதனைப்படைக்கும் பெருந்தொகை பணமான 222 மில்லியன் யூரோக்களுக்கு ஐந்து வருட ஒப்பந்தமாக பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வாங்கியது.

இதன்பின்னர் நெய்மருக்கு 10 எண் பொறித்த ரீ-சேட்டை பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வழங்கியது. ஐரோப்பிய கண்டத்தில் ஒரு வீரரின் பெயரில் வீரர் இடம்பிடித்துள்ள கழகம் மட்டுமே ரீ-சேட்டை அச்சீடு செய்து வெளியிடப்படும். மற்றவர்கள் அச்சீடு செய்யக்கூடாது. இந்த ரீ-சேட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் கழகங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

அந்த வகையில் பி.எஸ்.ஜி. நெய்மர் பெயர் மற்றும் எண் பொறித்த ரீ-சேட்டை அச்சீடு செய்து விற்பனை செய்து வருகிறது. முதல் நாளிலேயே இந்த கழக 10 ஆயிரம் ரீ-சேட்டுகளை விற்றுள்ளது. விரைவில் ஒரு லட்சம் ரீ-சேட்டுகளை விற்பனை செய்ய அந்த கழகம் முடிவு செய்துள்ளது.

ஒரு ரீ-சேட்டுக்கு 100 யூரோ விலை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டும் 1 மில்லியன் யூரோ சம்பாதித்துள்ளது. இப்படியே சென்றால் மார்ச் மாதம் மத்தியில், நெய்மரின் இடமாற்றம் தொகையான 222 மில்லியன் யூரோவை பி.எஸ்.ஜி. அணி சம்பாதித்துவிடுமாம்.

Related posts: