நிக் பொதாஸ் நாட்டைவிட்டு வெளியேறினார்!

Wednesday, April 18th, 2018

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பளரும், பந்து வீச்சு பயிற்றுவிப்பாளருமான நிக் பொதாஸ் இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளார். இலங்கை கிரிக்கட் சபையுடனான அனைத்துவிதமான உடன்படிக்கைகளும் நிறைவுக்குவந்த நிலையில் நிக் பொதாஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக இணைந்து கொண்ட நிக் பொதாஸ், அணியின் பிரதானபயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய கிரஹம் போர்ட் 2017 ஆம் ஆண்டு தனது பதவியில் இருந்து விலகிய நிலையில், நிக் பொதாஸ் பிரதான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

எனினும் நிக் பொதாஸ் பயிற்சியின் கீழ் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், சந்திக ஹத்துருசிங்க இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனால் நிக் பொதாஸ் அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக மீண்டும் கடமையாற்றினார்.இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி கிரிக்கட் நிறுவனத்துடன் கலந்துரையாடி உடன்படிக்கைகளை அவர் நிறைவுசெய்து கொண்டுள்ளார். இவர் தலைமையில் இலங்கை அணி தோல்விகளையே அதிகம் ஈட்டியிருந்தாலும், பாக்கிஸ்தானுக்கெதிராக சரித்திரபூர்வமான வெற்றியை பாக்கிஸ்தானின் கோட்டையாகிய அமீரகத்தில் பெற்றிருந்தது இங்கு சுட்டத்தக்கது.

ஏற்பட்டிருக்கும் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக, பாக்கிஸ்தானின் முஸ்ராக் அகமெட்டை இலங்கை கிரிக்கட் சபை இலக்கு வைத்துள்ளது. இவர் முன்னதாக இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தானில் கடமையாற்றியிருந்தார். குறித்த வெற்றிடத்தை வருகின்ற இரு மாதங்களுக்குள் நிரப்பவுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

Related posts: